பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


பின்னணி இசைத்து வலுவேற்றிக் கொண்டிருந்தது. இருளப்பக் கோனார் அந்த அறையின் வாசல்புறத்தில் ஓரமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

மணிபோர்வையை இழுத்து மார்புவரையிலும் மூடிக் கொண்டு படுத்திருந்தான். அவன் கண்கள் அந்த அறையில் கவிந்து நின்ற இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன; காதுகள் கடிகாரத்தின் தாள லயத்தை உற்றுக்கேட்டு, அந்தலயத்தின் இசைவோடு அவன் மனத்தை ஒரு நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தன. இடையிடையே அடி வானத்தில் வெட்டி மினுக்கி மறையும் மின்னல் தூண்டில் போட்டு இழுப்பது போல் ஆஸ்பத்திரி அறைக்குள் ஒரு கணம் ஒளியை மிதக்க விடுவதும், மறு கணமே அதைச் சுண்டி வாங்குவதுமாக இருந்தது.

இருளையே பார்த்தவாறு கிடந்த மணியின் மனமும் எண்ணற்ற சிந்தனைக் குழப்பங்களால் ஒளி பெறுவதும் இருள் மூடுவதுமான நிலையில் தவித்துக் கொண்டு இருந்தது.

எத்தனை நினைவுகள் எத்தனை எண்ணங்கள்!

அன்று ஒருநாள் சங்கர் மணியின் தாயை அழைத்து வந்திருந்தான். வெள்ளைப்புடவையும், கும்குமமிழந்தபாழ்துதலும், மங்கல நாணை இழந்த வெறுங் கழுத்துமாக, தலைவிரி கோலமாய், அழுதழுது வீங்கிச் சிவந்த கண்களோடும், ஒளியிழந்து வாடி வதங்கிய முகத்தோடும் அவள் அந்த அறைக்குள் வந்தபோது மணியின் உள்ளத்தில் ஏதோ திடீரென்று சுளுக்கிக் கொள்வது போலிருந்தது அந்தச் சுளுக்கின் நரக வேதனையைத் தாங்கமாட்டாமல் அவன் கண்கள் கண்ணீரைப் பிதுக்கித் தள்ளின.

தங்கம் உள்ளேவந்ததும் ஓவென்று அலறிப்புடைத்து விட்டாள்.

"அப்பா மணி, மகனே! என்னை இந்தக் கோலத்திலாடா பார்க்கணும்? உங்க அப்பாவையும், தம்பியையும்

13