பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


எச்சிலைத் தின்று வாழவேண்டும்? உலகத்தின் இன்பங்களையெல்லாம் பறித்துத் தீர்த்து, வாழ்நாளெல்லாம் வேதனையைத் தந்துகொண்டிருக்கும் குஷ்டரோகத்தையும் தாங்கிக்கொண்டு மனிதன் ஏன் அலைந்து திரிகிறான்? கூனும், குருடும், நொண்டியும் ஏன் உயிர் வாழ்கிறார்கள்? பெண்கள் உடலை விற்று விபசாரம் செய்து ஏன் உயிர் பிழைக்கிறார்கள்?…

"மனிதன் வாழத்தான் விரும்புகிறான்; சாக விரும்புவதில்லை; ஆனால் இப்படித்தான் வாழ வேண்டுமா? இதுவா வாழ்க்கை? நல்ல முறையில் வாழ்க்கையை வாழ்வதற்கு வகையே கிடையாதா?

"இதைப் பற்றித்தான் என் நண்பர்கள் அப்போது கவலைப் பட்டார்களா? இதைத்தான் சங்கர் என்னிடம் சொன்னானா?…

தனக்குத்தானே தர்மாவேசம் கொண்ட மணியின் இதயம் தன்னை வைத்தே உலகத்தை அளந்து பார்த்தது. வேறுமாதிரியாக அளந்து நோக்க அவன் முனையவும் இல்லை; அதற்குரிய அளவுகோலும் அவனிடம் இல்லை; எனவே மானாவாரியாக அவன் உள்ளத்தின்மீது சொரிந்து குவியும் கேள்விகளின் பாரத்திலிருந்து விடுபட முடியாமல் தத்தளித்தான்…

அவனால் அதிக நேரம் சிந்தித்துக் கொண்டிருக்க இயலவில்லை; அவனை விட்டு விலகி நின்ற தூக்கம் மீண்டும் அவனை அணுகி, அவன் பிரக்ஞையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது. அதன்பின் ஊசிக்கோபுர மணியோசை அவன் காதில் உறைக்கவில்லை…

மறுநாள் காலையில் மணியின் நண்பன் படுக்கையை விட்டு எழுந்திருந்து, "மணி, இன்னுமா தூக்கம்?" என்று கேட்டுக்கொண்டே வராந்தாவுக்கு வந்தான்.

அங்கு மணியைக் காணவில்லை.