பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220



20

செங்கோட்டைக்குச் செல்லும் பாஸஞ்சர் ரயில் அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் தாகம் தீரத் தண்ணீர் குடித்துவிட்டு அப்போதுதான் கிளம்பிச்சென்றது.

ரயில் கிளம்பிச் செல்லுமுன்னரே பொழுது சாய்ந்து விட்டது. மேல் வானக் கோடியில் மலைக்கும் வானத்துக்கும் எல்லை காணாதவாறு இருள் கவிழ்ந்து மூடி விட்டது.ஸ்டேஷனுக்கு அப்பால் தூரத்தில் தெரியும் அம்பாசமுத்திர நகருக்குள், அப்போதுதான் ஏற்றப்பட்ட மின்சார விளக்குகள் கோலத்துக்குப் புள்ளி வைத்தது போல் பொட்டுப் பொட்டாசுத் தெரிந்தன. ஆளரவம் குறைந்து தூங்கிக் கொண்டிருந்த ரயில்வே பீடர்சாலை ரயிலின் வரவால் உயிர்ப்புப் பெற்று விளங்கியது. சளசளத்துப் பேசம் மனிதர்களும், கலகல வென்று மணியோசை யெழுப்பும் இரட்டைமாட்டுவண்டிகளும் செல்லும் அந்தச் சாலை அந்தி நேரத்தின் சவ அமைதியை இழந்து குதூ கலித்தது.

சங்கர் ரயிலை விட்டு இறங்கி ஊரை நோக்கிச் சாவதானமாக நடந்து வந்தான்.

முந்திய நாள் மாலையில் பாளையங்கோட்டையில் 'பெர்லின் வீழ்ச்சி' என்ற ருஷ்யப் படம் காட்டப்பட்டது. அதைப் பார்ப்பதற்காகத்தான் சங்கர் திருநெல்வேலி சென்றிருந்தான்.ரயில்வே பீடர் சாலையில் காலாற நடந்து வரும் போது அவன் மனத் திரையில் அந்தப் படத்தின் காட்சிகள் மீண்டும் ஓடிச் செல்வது போலிருந்தன. சங்கர் அந்தப் படத்தை எண்ணியெண்ணி வியந்தவாறே வந்து கொண்டிருந்தான்.

ஐவனோவ் ஒரு இரும்பாலையிலுள்ள திறமைமிக்க தொழிலாளி. ஆனால் நாஜி வெறியன் ஹிட்லரின்