பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


"என்ன தம்பி, ஒரு கடுதாசி கூடவா போடப் பிடாது? அதை நினைச்சாத்தான் தப்புத் தண்டாவா எதுவும் நடந்திட்டுதோன்னு பயமாயிருக்கு!" என்றார் கோனார். அவர் குரல் உள்வாங்கிக்கம்மி ஒலித்தது.

'அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்க அவன் மனம் என்னமாட் புண்பட்டிருக்கோ? மனசு சரிப்பட்டா, தானே வந்து சேருவான்" என்று ஆறுதல் கூறினான் சங்கர்,

"எம் புள்ளெயைப் பறி கொடுத்திட்டு, இத்தனை வருசமா நான் பட்டபாடு போதாதுன்னு, கடவுள் இப்போ மணி ஐயாவையும் பிடுங்கிட்டுப் போயிட்டாரு தம்பி, எம் மனசே சரியில்லை; இந்த மாசக் கடைசிக்குள்ளே ஒரு தகவலும் கிடைக்கலேன்னா, நானே ஊர் ஊரா நாய்மாதிரி திரிஞ்சாவது, மணி ஐயாவைத் தேடிப் பிடிக்கிறதுன்னு இருக்கேன். இங்கே அவுக அம்மா படுகிற பாடு பார்க்க முடியலெ" என்று நொந்துபோன உள்ளத்தோடு குமைந்து பேசினார் கோனார்.

சங்கர் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் மௌனமாயிருந்தான்.

இதற்குள் குடிசைக்குள்ளிருந்து, "ஏ, எம் பிறவி ராசையா!" என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து அழும் தங்கத்தின் அழுகுரல் இருளின் அமைதியைக் கிழித்துக் கொண்டு மேலோங்கியது.

தங்கத்தின் அழுகுரலைக் கேட்டதும், சங்கருக்கு அவனையும் மீறி, கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முகத்தைத் துடைக்கும் பாவனையாய், கைக் குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஆனால் உலக அனுபவம் மிகுந்த இருளப்பக் கோனார் அந்த இருளிலும் சங்கரின் நிலைமையைப் புரிந்து கொண்டார். எனவே திடீரென்று பேச்சை மாற்றினார்.