பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


அவன் கற்பனையும் ஆடிப் பாடித் தன்னிச்சையாகச் சென்றது.

'திருச்சிக்குச் சென்று அங்குள்ள நண்பன் ஒருவனைச் சந்தித்து.ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்; பின்னர் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதி அவளை வரவழைக்க வேண்டும்; கமலாவையும் முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அம்பாசமுத்திரத்தில் நிகழ்ந்த பயங்கரங்களையெல்லாம் மறந்து விட்டுப் புது வாழ்க்கை தொடங்கவேண்டும்..'

அந்தப் புது வாழ்க்கையைப் பற்றிய கனவிலேயே அவன் திருச்சி போய்ச் சேர்ந்தான்.ஆனால் அங்கு அவன் தேடிச் சென்று நண்பன்தான் இல்லை.அவனைப் பற்றித் தகவல் தெரிவிப்பாரும் இல்லை!

மணி திருச்சியில் தெருவில் நின்றான்; பையிலுள்ள இருபது ரூபாயும் சொச்சமும் அவனுக்குச் சிறிது தெம்பளித்தது.

இந்த ரூபாயும் செலவழிவதற்குள் ஊர் சென்று விடலாமா? சே! ஊருக்குச் சென்று யார் முகத்தில் எப்படி விழிப்பது? சேச்சே! ஊர் திரும்பக் கூடாது. இவ்வளவு பெரிய ஊரில் எனக்கு ஒரு வேலையுமா கிடைக்காது?...

அவன் தன் திட்டம் இன்று அல்லது நாளை நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையோடு வேலை தேடி அலைந்தான். பஸ் கம்பெனி, ரயில்வே ஸ்டேஷன், காபி ஹோட்டல், சினிமாக் கொட்டகை, ஒர்க் ஷாப், கடை - எங்கெல்லாமோ சுற்றியலைந்தான். அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாவதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை.

அவன் வேலையற்று, பணமற்று: உணவற்று, தெருவில் திண்டாடி நின்றான்....

அந்த அனுபவங்களை எண்ணியபோது அவன் கண்ணில் நீர் கரித்தது.