பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256


"வீட்டைவிட்டு ஓடிவந்தது முதல் நான் பட்டபாடு நாய் கூடப்பட்டிருக்காது. வேலை கிடைக்காது அலைந்து திரிந்து கடைசியில் இக்கோலத்துக்கு ஆளானேன், என் அப்பாவைப்போல் நானும் உயிரை விட்டிருந்தால் எனக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காது. அதற்குக்கூடத் துணிச்சல் இல்லை, எனக்கு"

இத்தனை நேரமும் மணி பேசுவதையே கவனித்துக் கேட்டு வந்த ராஜு மீண்டும் பேசத் தொடங்கினார்:

"மிஸ்டர் மணி உங்கள் வரலாற்றைக் கேட்டதில் என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது. ஆனால், நீங்கள் உங்கள் தந்தையைப் போல் தற்கொலை செய்து கொள்ள முனையாது, இத்தனை கஷ்டங்களுக்கிடையிலும் உயிர் வாழ விரும்பியது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நினைப்பது போல், தற்கொலை செய்து கொள்வது அப்படியொன்றும் துணிச்சலான காரியமல்ல. வாழ்க்கையில் விரக்தியடைந்த எந்தப் பைத்தியக்காரனும் லகுவில் செய்து கொள்ளக்கூடிய காரியம் அது.தற்கொலை என்பது கோழையின் கண்ணில் படும் முதல் புகலிடம். வாழ்க்கையின் சிரமங்களை எதிர்த்துப் போராடத் துணிச்சலற்றுத் தன்னைத் தானே ஒருவன் அழித்துக் கொள்வதா? ஆனால், நீங்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததையும் நான் துணிச்சலான காரியம் என்று சொல்லமாட்டேன். அதுவும் கோழைத்தனம் தான். எங்கு ஓடிவிட முடியும்? இமயம் முதல் குமரி வரையிலும் ஓடியலைந்தாலும், நாடெங்கிலும் இதே நிலைமைதானே.இதிலிருந்து நீங்கள் மட்டும் தப்பித்துவிட முடியுமா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த உலகப் போக்கிற்கு நீங்கள் கட்டுப்பட்டவர்கள். இதை உங்கள் இத்தனை நாள் அனுபவமே கற்றுக் கொடுத்திருக்குமே!"

இந்த வாக்கியத்தைக் கேட்டதும், மணிக்கு ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது.ஆஸ்பத்திரியில் கிடந்தபோது சங்கரும் இப்படித்தானே சொன்னான்?...