பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


கொண்டார்; வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டார். அவன் சிறு குழந்தை போல் தெரியாத்தனமாகக் கேட்கும் சிறு சந்தேகங்களையும்கூட, அவர் தெளிவிக்க முன் வந்தார். ராஜுவும் மணியும் சங்க வேலைகளை முடித்து விட்டு, சமயங்களில் இரவுபூராவும் உட்கார்ந்து விவாதிப்பார்கள்; மணி அவரிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை அவனுக்கே அவரிடம் தனது அந்தரங்கங்களை யெல்லாம் சொல்லிவிட வேண்டும் போலிருந்தது. அவன் அவரிடம் தன் கடந்த கால வாழ்வின் கோரங்களைப் பற்றி இழி தன்மைகளைப் பற்றிச் சொன்னான் பள்ளி வாழ்வில் தான் கனவு கண்ட சொப்பன வாழ்க்கையைப் பற்றிச் சொன்னான், தன் நண்பன் சங்கரைப்பற்றி, தாயைப்பற்றி, கமலாவைப் பற்றியெல்லாம் சொன்னான்; தன் காதலையும் கூட, அவன் அவரிடம் தெரிவித்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அவர் தன்னை ஒரு சிறந்த லட்சியத்துக்காகப் பாடுபடும் பணியில் இழுத்து விட்டதை என்ணியெண்ணி அவன் பூரித்தான்.

அன்றிரவு மணி தன்னந்தனியாக இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். எண்ணெய் வற்றி இரட்டைத் திரி போட்டு விகாரமாக எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் அவன் அந்தப் புத்தகத்தை ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த இதயமற்ற விளக்கின் சுடர் திடீரென்று துள்ளித் துள்ளிக் குதித்து விட்டு, தன் உயிரை விடுத்து அணைந்தது. மணி புத்தகத்தை மூடிவைத்து விட்டு, வெளி வராந்தாவில் வந்து திண்ணையில் படுத்து, தன் சிந்தனையைத் திரியவிட்டான்.

'மணியும் பன்னிரண்டாகப் போகிறது. இன்னும் ராஜுவைக் காணோமே! ஏன் இவ்வளவு நேரம்? எப்படியும் படுக்க வந்து விடுவார்.ராஜூ! அவருக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டவன்? என்னை மனிதனாக்கியவரல்லவா அவர்? அன்று ஆஸ்பத்திரியில் கிடந்த போது சங்கர்