பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283


மறு கணமே அவன் அந்தக் கடிதத்தை மறந்துவிட்டான், அந்தப் படத்தில் பதித்த கண்ணை வாங்க முடியாமல் அப்படியே பிரமித்து விட்டான்,

அந்தப் புகைப்படத்தில் இருளப்பக் கோனாரும், அவர் மனைவி மாரியும் இருந்தார்கள்!

தனக்கு ஏற்பட்ட திக் பிரமையிலிருந்து விடுபட்ட மணியின் மனத்தில் எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் சரக்கூடம் வகுத்து அவனைப் பிணித்தன. அவன் அந்தப் படத்தைக் கையிலெடுத்துக் கொண்டு வெளியே வந்தான். படத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு இருளப்பக் கோனாரின் நினைவும், அவரது விகவாச புத்தியும் நினைவுக்கு வந்தன. ஆனால், இருளப்பக் கோனாரைப் பற்றிய நினைவுகளையெல்லாம் மிஞ்சி, மணியின் மனத்தில் படத்தைப் பற்றிய சந்தேகங்களே வலுத்தன.

'இந்தப் படம் இங்கே எப்படி வந்தது? ராஜுவுக்கும் இருளப்பக் கோனாருக்கும் என்ன சம்பந்தம்? இருளப்பக் கோனாரை இவருக்குத் தெரியுமா? இவர் அவருக்கு உறவினரா_'

மணியின் மனத்தில் திடீரென்று இருளப்பக் கோனாரின் காணாமற்போன மகன் வீரையாவைப் பற்றிய நினைவு வந்தது.

'ஒரு வேளை இருளப்பக் கோனாரின் மகன் வீரையாவை ராஜுவுக்குத் தெரிந்திருக்குமோ? வீரையாவை ராஜுக்குத் தெரிந்திருந்தது என்றே வைத்துக் கொண்டாலும், இந்தப் படம் ராஜுவின் பெட்டியில் இருப்பானேன்? ஒருவேளை வீரையாதான் இந்தப்படத்தை இவரிடம் கொடுத்து வைத்திருந்தானோ? ஏன் கொடுத்து வைக்க வேண்டும்? அல்லது வீரையா இறந்து போய் விட்டானோ? ராஜு அவன் ஞாபகார்த்தமாக இந்தப் படத்தைவைத்திருக்கிறாரோ?ஞாபகார்த்தமாக இருளப்பக் கோனாரின் படத்தை ஏன் வைத்திருக்க வேண்டும்...? :