பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311


முதலியார் கமலாவின் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு செல்ல முனைந்தார்.

"அப்பா! அப்பா!" என்று கமலா கதறிய குரல் அந்தகார. இருளின் அமைதியைக் குலைத்துப் பயங்கரமாக ஒலித்தது.

இத்தனை நேரமும் தன் தந்தையின் ஆக்ரோஷத்தையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொண்டு நின்ற சங்கர் பொறுமையை இழந்து விட்டான். உடனே அவன் ஓடோடிச் சென்று, தன் தங்கையைத் தன் தந்தையின் பிடியிலிருந்து பலவந்தமாக விடுவித்து, அவளைப் பின்னால் போகச் சொல்லி விட்டு, பதியிட்டுத் தாக்க முனையும் புலி போல் தந்தையை முறைத்துப் பார்த்தான்:

"அப்பன் என்ற மரியாதைக்காக இத்தனை நாளும் பொறுத்துக் கொண்டிருந்தேன். இனிமேல் என் தங்கையின் இஷ்டத்தில் நீங்கள் குறுக்கிட நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!" என்று வைரம் பாய்ந்த குரல் அவன் கண்டத்திலிருந்து வெடித்துப் பிறந்தது.

"குலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்பே! எனக்கே விரோதியாகி விட்டாயா?" என்று சீறினார் தாதுலிங்க முதலியார்.

"உங்களுக்கென்ன? உங்கள் வர்க்கத்துக்கே நான் விரோதிதான்"

"டேய் சங்கர்! நீ யாரிடம் பேசுகிறாய் என்பது ஞாபகமிருக்கட்டும்!"

'யாரிடமா? கேவலம், பணத்தாசையின் காரணமாக ஒரு. குடும்பத்தையே பலி வாங்கிய ரத்த பிசாசிடம் பேசுகிறேன். உங்கள் பேராசை கைலாச முதலியாரைப் பலி வாங்கியது போல், உங்கள் மமதைக்கு என் தங்கையைப்பலி கொடுக்க நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!

"என்ன திமிரடா உனக்கு?"