பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

97

இனியவரைப் பிரிந்து வாழ்தலின்றிக் கூடியேயிருக்கின்ற நிலையினராகுமாறு, நீதான் நின் ஆட்சித்தொழிலைச் செய்து வருகின்றனை. ஆதலினாலே, நின் நாடு மிக்க திருவினை உடை தாயிருப்பது, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: விடு நிலம் - மேய்ச்சலுக்கு விடப்பெற்ற ஊர்ப் பொதுநிலம். கரம்பு - வேறு எதுவும் விளையாத தரிசு நிலம். விடர் அளை - வெடிப்பின் வாய். கோடை- கோடைக்காலம். குன்றம் - மலைப்பகுதி. புல்லெனல் - பொலிவழிதல். வறற்காலை - வறட்சிக்காலம். கரைநிவந்து - கரையளவுக்கு உயர்ந்து. நனந்தலை அகன்ற இடம். பேரியாறு; ஆற்றின் பெயர். சீர் - சிறப்பு; இது - ஆற்றுப் பாய்ச்சலுள்ள பகுதியிலே அமைதலால். வியன் புலம் - அகன்ற வயற்பகுதிகள். வாய் - வாய்க்கால்; இடம். மிகீஇயர் - மிக்கதாக. உவலை-தழை. உருத்து – சினந்து. செந்நீர் - சிவப்பான புது வெள்ளம். பூசல் - ஆரவாரம். வெம்மை - கொடுமை. அகன்றலை - பரந்த இடத்தைக் கொண்ட நாடு; குட்டுவனது நாட்டுப்பகுதி. தமிழகத்தின் பிற பகுதிகளிற் கோடைக் காலம் நீடித்து வருத்துகின்ற ஆனியும் ஆடியுமாகிய மாதங்களில், சேரநாட்டுப் பக்கத்தே தென்மேற்குப் பருவக்காற்றால் பெருமழை பெய்யும்; இதனையே நயமாகக் கூறுகின்றனர். நீர்வளத்தால் உண்டாகும் பேராரவாரத்தை யல்லாமல், நீரற்று வெம்மையால் வாடித் துன்புறும் நிலையற்ற, வளநாடு என்று கொள்க.

திரு - செல்வம்; இயற்கை செயற்கை வளங்கள். விறல்- வல்லமை; வீறுடைமை. புணர் நிரை - தொடர்ந்து செல்லும்வரிசை. துமிய - துண்டுபட்டு அழிய. உரம் - வலி துரந்து - செலுத்தி. கறை - குருதிக்கறை. கழல் - வீரக்கழல். கடு - விரைவுடைய. மா - பெரிய. மறவர் - போர்மறவர். கதழ்வு - விரைவு. தொடை - அம்புதொடுத் தெய்யும் செயல். இளை தந்து - காத்து. முட்டுறல் - குறைபாடு உண்டாதல். புலம்பா உறையுள் - பிரிவற்றுத் தங்கியிருத்தல். தம் அம்புகளாலே பகைவரது களிற்றுப்படை நிறையை அழிக்கும் திறனுடைய பெருமறவர் எல்லாரும், நீதான் நின் நாட்டை இனிதாகக் காத்தலினாலே, தம் அம்புசெலுத்தும் தொழிலையே மறந்தாராயினர் என்பதாம். காட்டாற்றுப் புதுவெள்ளம் தழைகளையும் தன் மேற்கொண்டு மிகுவிரைவோடு வருதலின், ' உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை' என்றனர்.

ப.—7