பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

113


தெளிவுரை: குன்றங்கள் பலவும் தன்மேலாகப் பொருந்தி நிற்கவும், பலவகைக் கடல்படு பொருள்களும் தன்னிடத்தே திரண்டுள்ள கடலானது தனக்கு ஆடையாக விளங்கவும் அமைந்தது மண்ணணுச் செறிந்த இவ்வுலகம். இதனிடத்துள்ள மாந்தரனைவரும் ஒருசேரத் தம் கைகளை மேலே எடுத்தவராகத் தம் குறைபாட்டைச் சொல்லிக் கதறும் ஆரவாரமானது, வேறுபட்ட நால்வகைத் திசைகளினும் ஒருசேரப் பரந்தொலிக்கும். தெளிந்த ஓசையினையும் உயர்ந்த வேலைப்பாட்டையும் கொண்ட மணியினை அடிப்பவர் கல்லென்னும் ஒலியை எழுப்புவர். உண்ணாவிரதத்தோடு நோன்பிருக்கும் மக்கள் கூட்டத்தினர், பசிய நிலப்பாங்கிலே அமைந்த குளிர்ந்த நீர்த்துறைகளிற் சென்று நீராடியவராக வழிபடுவதற்கு வருவர். வண்டினம் மொய்த்துத் தேனூதும் அழகிய தாரினை யணிந்ததும், திருமகள் பொருந்தியதுமான மார்பினையும், காண்பார் கண்களைத் தன்னொளியாலேயே கூசச்செய்யும் ஒளிகொண்ட சக்கரப் படையினையும், மணம் வீசும் கொத்துக்களையுடைய துளசி மாலையணிந்த சிறப்பினையும் உடையவன் திருமால். செல்வனாகிய அத்திருமாலின் சிவந்த அடிகளைப் பரவிய பின்னர், இவர்களனைவரும் தத்தம் நெஞ்சகத்தே நிறைவுபெற்ற உவகையுடையவராகத் தாந்தாம் வாழும் ஊர்கட்குத் திரும்பிச் செல்வர். அவர்கள். அங்ஙனம் வணங்கிச் செல்லுமாறு—

நீலமணியைப் போன்ற நிறத்தைக் கொண்ட காரிருளானது அகலும்படியாகத், தன் நிலவுக் கதிர்களைப் பரப்பிய வண்ணம், தன் இருமுனைகளும் ஒன்றுகூடி விளங்கும் முழுமதியானது வானகத்தே தவழ்ந்து, செல்லலுற்றாற்போல் வறுமையால் வாடிய குடிமக்களின் சிறந்த ஒழுக்கத்தினைத் திருத்தமுறச் செய்தவனாக, முரசத்து முழக்கினைக்கொண்டு, நின் ஆண்மைக்குரிய கடமையைச் சீருறச் செய்து முடித்தனை! பூண்கள் விளங்கும் நின் அகன்ற மார்பகமானது, தொகுதிகொண்ட மேகங்கள் குளிர்ந்த மழையினை பெய்யத் தலைப்பட்டதும், வடக்குத் தெற்காகக் குறுக்கிட்டுக் கிடப்பதும், மேகங்களைத் தடுக்கும் உச்சியையுடையதும், அழகினை யுடையதுமான, பனி நிறைந்த திருமாலின் சிறந்த மலையான வேங்கடமலையைப் போன்றதாகும், பெருமானே!

கடவுளரின் தாக்குதலுக்கு அஞ்சிய அசுரர்கள் வானத்திடத்தே அமைத்த, தொங்கும் கோட்டைகளின் கதவங்-


ப.—8