பக்கம்:பாற்கடல்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

லா. ச. ராமாமிருதம்


அண்ணாவிடம், ஐந்து குழந்தைகளுடன் - இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் - வந்துவிட்டாள்.

பின்னர் ஒருநாள் - நடராஜ ஐயர் இம்மையின் தேடலில் படும் அவஸ்தை காலதேவனுக்கே காணப் பொறுக்காமல், அவருடைய சீட்டைத் தேடிக் கண்டு எடுத்துவிட்டான். ஸ்ரீமதி தன் பேறுகளுடன் இங்கேயே வேரோடிப் போனாள்.

மூத்த பிள்ளைக்கு அடுத்துப் பெண்; அடுத்து என் அம்மா, அப்புறம் சுப்ரமணியன், சுந்தரம்.

பொதுவாகவே, இதுபோன்ற துர்ப்பாக்கியவதிக்குக் குடும்பத்தில், அவள் வயது கடந்த செல்லம் கிடைத்துவிடும். இதை என் சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன். ஸ்ரீமதியை இமைபோல்தான் காத்தனர். செல்லம் என்றால் என்ன? சொல் ஆதரவும், இருக்கிற கஞ்சியை வஞ்சமில்லாமல் வந்தவளுடன் பங்கிட்டுக் கொள்வதும்தான். தமிழ்ப்பண்டிதர் வீட்டில் வேறென்ன தனியாகக் கிடைத்துவிடும் ? ஒருவருக்கொருவர் பாட்டுக்கள் பரிமாறிக்கொள்ளலாம். அதுதான் நடந்தது.

ஆணுக்குச் சரியாக இலக்கிய விசாரம் பேசும் அறிவாற்றல், குண இயல்பு படைத்த பெண்மணி ஒரு பாக்கியம். அந்த வீட்டில் அடிக்கடி சின்னத்தனங்கள் பேச்சிலோ செயலிலோ நிகழா. ஒரு தோரணையிலேயே வண்டி ஓடும். ஆங்கரையில் இதே விலாசம் ஏது?

ஏதோ கையிலும் கழுத்திலும் இருந்த ஒன்று, அரை - பொன்னோ, காக்காப் பொன்னோ - பூட்டி, முதல் பெண்ணை, உடன் பிறந்தவர்மார் உபயத்தில் கட்டிக் கொடுத்தாச்சு. ஆங்கரைப் பையன், வேலை தபால் இலாகாவில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/104&oldid=1533381" இலிருந்து மீள்விக்கப்பட்டது