பக்கம்:பாற்கடல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

121


மூன்றெழுத்துமல்ல; என் முழுப் பெயருமல்ல. அடையாளத்துக்குப் பெயரில் ஆரம்பித்துப் பெயரோடு நானும் பாற்கடலில் கரைந்துவிடல் வேண்டும்.

இதை எழுதிக்கொண்டே இருக்கையில், கடலோடு நதிக்குக் கோபமேன்? என்று ரேடியோவிலிருந்து பாடல் புறப்படுகிறது. ஆம்; அத்தனையும் கடலில் கலக்க வேண்டுமென்றிருக்கையில், கோபத்தால் பயன் என்ன? ஆகவே நம் வீர சைவம் உணவு மட்டில் இருக்கட்டும்; பிறமொழிகள் மேல் காட்ட வேண்டாம். பாஷையும் பண்பும் அவ்வப்போது தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்வதற்கு மற்ற இலக்கியங்களின் உரம் காரணமாகும், தேவை. எல்லா பாஷைகளையும் படிக்க நமக்கு வழியில்லை. அத்தனையையும் மொழிபெயர்ப்பில் ஆங்கிலம் நம் வாசற்படியில் கொணர்ந்து தருகிறது.

ஆங்கிலம் ஜீவ பாஷையாக இருப்பதற்குக் காரணம் - அது இந்தியாவின் அந்நிய நாட்டுக் கடன்களைக் காட்டிலும், ராக்ஷஸ அளவுக்குத் தொன்றுதொட்டு அந்நிய மொழிகளிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. இந்த இடத்தில் அதன் சிறப்பு, அது திருப்பிக் கொடுப்பதில்லை. அத்தனையையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது. சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நிறையப் படியுங்கள். இருநூறு வருட ஆங்கில அரசாட்சியில், வயிற்றுப் பிழைப்பு காரணமாகவே வலுக்கட்டாயப் படிப்பாக, எங்கள் தலைமுறை வரை எங்கள் ரத்தத்திலேயே ஊறிவிட்டது. அதுபற்றி எனக்கு வருத்தமில்லை. மகிழ்ச்சியே. உலகத்தின் பலகணிகள் திறந்துகொண்டால் நோகுமா?

Let there be light!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/127&oldid=1533979" இலிருந்து மீள்விக்கப்பட்டது