பக்கம்:பாற்கடல்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

லா. ச. ராமாமிருதம்


பந்து அவர்களைப் பதப்படுத்துகிறான். ஒன்று தெரிகிறது. யாருக்கும் அவன், அவரவர்க்குரிய வாழ்க்கைப் பங்கை ஏமாற்றுவதில்லை. அவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட அத்தாட்சி வேண்டாம். ஆனால் அவன் அதை வழங்கும் வழிகள்தாம் புரிவதில்லை. அப்படியும்தான் அவன் ருசுவாகிறான்.

இன்னும் புதிர்! அது அவனோ? அவளோ ? அதுவோ ?

எதுவோ? (ஹும்)

“எது எப்படி இருந்தால் என்ன? இழைச்சவாளும் செஞ்சவாளும் இந்த உலகத்தை விட்டே போயாச்சு. உங்கப்பாதான் பலனில்லாமல் பசலியான நினைப்புகளுக்கு, இன்னமும் இடம் கொடுத்துண்டு தன் மனசையும் கெடுத்துண்டு அவதிப்படறார். முதல் கோணல் எங்களுக்கு அப்பன் வயணமில்லை.”

இப்படியெல்லாம் சிந்திக்கறதாலே திரும்பி வருவாரா? திருந்தியிருப்பாரா? நாங்களோ தஞ்சம் அடைஞ்சுவிட்டோம். ராமசாமி மாமா எவ்வளவுக்குத் தான் ஈடு கொடுப்பார்? மன்னியுந்தான் என்ன செய்வார்? பெண்ணுக்கு விடிவு கண்ட இடத்தில் உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொல்வதில் என்ன தவறு? பெத்தவா சுபாவம் அது. மன்னி சொல்லாததனாலே அண்ணா சௌக்யம் சேர்த்துக்காமல் இருக்கப் போறானா? தான் எண்ணெய் தேச்சுக்காமல் இருக்கப் போறானா? மூல வியாதிக்காரன், முக்கியமா அவனுக்கு நெய் சேரணும். இல்லை, சோனாதான் சமைச்சுப் போடாமல் இருக்கப்போறாளா? குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தாய் தகப்பன் இல்லாதவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/172&oldid=1534275" இலிருந்து மீள்விக்கப்பட்டது