பக்கம்:பாற்கடல்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

257


அடுப்பு நெருப்பைப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறதை வைத்துக்கொண்டு, நானும் வேறு எப்படி இருந்திருக்க முடியும்? என்கிற சந்தேகமற்ற நம்பிக்கையில் எழுதினேன். குழந்தையின் சிந்தனை நான் விவரித்தபடி ஓடியிருக்குமா? (ஏழு மாத முகங்கள் அல்ல இவை, ஏழாயிர வருடங்களின் முகங்கள்) அவரவர் யூகத்துக்கு ஏற்றபடி (anybody's guess). குழந்தைக்கு என்ன தோன்றியிருக்கும்? சாயங்களைக் கண்டதா? முகங்களைக் கண்டதா ? எதைக் கண்டாலும் தத்துவமாகச் சிந்தித்ததா? யாருக்குத் தெரியும்? சிந்திக்கவே அதனால் முடியுமா? நினைவுப் பாதையில் அந்த இடம் இன்னும் நம் பாதம், படாத பூமி. ஆகையால் கதாசிரியன் புகுந்து விளையாடும் விளையாடக்கூடிய இடம் அதுதான். அதுவே குற்றமாயின், அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை தொடர்ந்து எனக்கு வளரும் இடமாக நான் அதை எடுத்துக்கொண்டு விட்டேன்.

அதே கதையில் கடைசிக் கட்டத்தில் கதாநாயகன் இறந்தபின்னரும் அவனுடைய தொடர்ந்த சிந்தனையை மட்டும் சித்தரித்திருக்கிறேன். ஸார் அந்த இடத்தையும் உண்மைக்குப் புறம்பானது என்று ஏன் கண்டனம் செய்யவில்லை? மறந்துவிட்டாரா? இல்லை, அந்தப் பகுதி அவர் கவனத்துக்குத் தப்பிவிட்டதா? அல்லது அதை ஏற்றுக்கொண்டு விட்டாரா? இதை சர்ச்சையாக வளரவிடாமல், இது சம்பந்தமாக ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

காளிதாசனுக்கும் முந்திய, அல்லது இதிகாச காலத்திலிருந்தே, விமர்சகர்களின் சம்மதத்துடன் (Poetic license) காவியச் சலுகை என்று ஒன்று வழங்கி வருகிறது. இந்தச் சலுகை தரும் இடத்தின் காரணமாகத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/263&oldid=1534344" இலிருந்து மீள்விக்கப்பட்டது