பக்கம்:பாற்கடல்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

லா. ச. ராமாமிருதம்


கிடையாது. வேணும்னா நக்ஷத்ர வெளிச்சத்தைச் சேர்த்துக்கோ - அதுவும் கிடைச்சவரை. இன்னிக்குக் கொஞ்சம் கறுக்கல், நிலாவெல்லாம் அவரவர் மனசு நிலாத்தான்.

காலம் சரியானபடிதான் எங்களுக்கு வக்கரித்துக் கொண்டு இருந்தது.

ஒருநாள் சாயங்காலம் மன்னி அடுத்த தெருவில் ஏதோ சாமான் வாங்க, என்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போனாள்.

எதிர் வீட்டுள் நுழைஞ்சு போனால் பின்கட்டு வாசலில் அடுத்த தெரு. அப்படித்தான் போனோம். அந்தியிருட்டு. கடைகளில், இப்பொத்தான் அங்கு மிங்குமாய்ச் சோம்பல் மினுக் மினுக் விடுகின்றன.

தெருவில் சக்கரங்கள் பறந்தவண்ணம், எங்கள் கடை எதிர்ப்பக்கம் சடக்னு நான் மன்னி கையை விட்டுட்டுத் தெருவின் குறுக்கே பாய்ந்தேன்.

“பூம்! பூம்!”

என்மேல் ஒரு பெரிய கட்டடம், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாதிரி - தன்னிடத்திலிருந்து பேர்ந்து வந்து என்மேல் மோதிற்று. கார் அடியில் போய்விட்டேன்.

முன் சக்கரம், அடுத்து, பின் சக்கரம். இரண்டுக்கும் இடைவெளி மின்னல் நேரத்திலும் மட்டு. ஆனால் தனித் தனி நேரம் - மண்டைமேல் ஏறி இறங்கினது எனக்கு நன்றாகத் தெரிந்தது. வாயிலிருந்து ஒரு சத்தத்துக்கு நேரமில்லை. சத்தம் மறந்துபோச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/326&oldid=1534452" இலிருந்து மீள்விக்கப்பட்டது