பக்கம்:பாற்கடல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

ன் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர்.

அவருக்குப் பதினாறு வயதினிலே, கனவில் பிள்ளையார் வந்து அவர் வாயில் கற்கண்டு போட்டாராம். மறுதினத்திலிருந்தே வரகவியாகி விட்டார். குலதெய்வத்தின் பேரில் தோத்திரங்கள் கொட்ட ஆரம்பித்தன. அச்சு வெட்கும் அழகான கையெழுத்தில் ஒரு பெரிய நோட்டுப்புத்தகத்தில் கறுப்பு மசியில் எழுதி வைத்திருந்தார். இந்த நோட்டுப் புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன். எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும், ஒரே அளவில் அடுக்கடுக்காய் எழுத்தின் மணிமாலை கண்ணைப் பறிக்கும், மனத்தை மயக்கிவிடும் வரிகளைப் படிப்பது அந்த இன்பத் திகைப்பினின்று தெளிந்த பின்னர்தான். அந்த அழகிய எழுத்துச் சரங்களே அம்பாளின் பாதகமலங்களில் சேரும் முதல் காணிக்கை.

இந்தத் தோத்திரங்கள் அவரவருக்கு மனப்பாடம் ஆன வரை, குடும்பத்தின் சோதனைக்காலத்தில் எங்களுக்கு ஆறுதல், தைரியம், நம்பிக்கை, ரட்சை, எல்லாமே அதுதான். மிக எளிமையான நடை, பாணவேடிக்கை ஏதுமிலாது அம்பாளிடம், சப்தரிஷி நாதரிடம் முறையீடுகள், தேவியுடன் தர்க்கங்கள், நேரிடை சண்டைகள், சமாதானங்கள், சாந்தங்கள், சஞ்சலங்கள், சலசலப்புகள், ஏக்கங்கள், உடனே தேறுதல்கள், திட்டுகள், அதட்டல்கள், அதிகாரங்கள், கெஞ்சல்கள் - எங்கள் குடும்ப தினசரி நடப்பில், பெருந்திருவும் பங்கான ஒரு ஆள். எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/38&oldid=1533010" இலிருந்து மீள்விக்கப்பட்டது