பக்கம்:பாற்கடல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

47


இந்த நோட்டத்திலேயே, எனக்குக் கட்டித் தொங்க விட்டிருக்கும் இன்னொரு லேபிளையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம், என்னைப் பற்றிய ஒரு பாராட்டு - படித்தேன். இரண்டிலும் என்னைத் தமிழ்ச் சிறுகதை உலகுக்குப் பிதாமகர் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஏன், சில வருடங்களுக்கு முன் என்னை இப்படி விளித்து ஒரு கவிதையே, ஒரு சின்னப் பத்திரிகையில் வெளி வந்திருந்தது. என் நரைத்த கரடிப் புருவங்கள் காட்டும் கரடிவித்தை!

தேசப்பிதா, குடும்பத்துக்குப் பிதாமகன் - ஆனால் சிறுகதைக்குப் பிதாமகன்? எழுத்துக்கும் வயது வகுப்பது உண்டா என்ன?

அப்படிப் பார்த்தால், என்னிலும் அப்பவே வயதில் மூத்தோர் - ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா- இன்று நம்முடன் இருக்கும் பி.எஸ். ராமய்யா - நினைப்புக்கு உடனே வரும் பெயர்கள் இவை. இன்னும் நான் அறியாத பெயர்கள் எத்தனையோ - இவர்களை நாங்கள் பிதாமகர்கள் என்றா அழைத்துக்கொண்டிருந்தோம்? புதுமைப்பித்தன் எழுத்தில் இன்னும் சீற்றம் சிந்துகிறது. ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. எழுத்தில் பட்டுக் கயிற்றின் முறுக்கேறிய உரம் மின்னுகிறது.

இவர்களுக்கும் முன்னால் வ.வே.சு. ஐயரின்‘ குளத்தங்கரை அரசமரத்’தைப் படிக்கையில் காதலின் இளமை ஏக்கம் அப்படியே மூட்டம் கவிகின்றது.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதடா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/53&oldid=1533149" இலிருந்து மீள்விக்கப்பட்டது