பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/135

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - பிறனில் விழையுடையாமை

113



(இ-ரை.) தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின்கண் தீவினை செய்தலை விரும்பி யொழுகுவார்; மன்ற - உறுதியாக; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர்.

உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும், தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியதுபற்றியும், உயிருடையவரேனும் செத்தவரே என்றார். 'மன்ற' தேற்றப்பொரு ளிடைச்சொல்.

144. எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

(இ-ரை.) எனைத்துணையர் ஆயினும் - எத்துணை உயர்ந்தோராயினும்; தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்: என் ஆம் - என்ன பயனுடைத்தாம்?

   உயர்ந்தோர் அரசனும் தலைமையமைச்சனும் படைத்தலைவனும் போலப் பதவியிற் சிறந்தார். தேரான் என்பது தேர்வான் என்னும் உடன் பாட்டு எதிர்கால வினையெச்சத்தின் எதிர்மறை. எத்துணை உயர்ந்தோனாயினும் குற்றங் குற்றமே யென்பது இக் குறளாற் கூறப்பட்டது.

145. எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

(இ-ரை.) எளிது என இல் இறப்பான் - பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின்கண் நெறிகடந்தொழுகுபவன்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன் குடிப்பழியையும் அடைவான்.

  'இல்லிறப்பான்' என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது.

146. பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.