பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

திருக்குறள்

தமிழ் மரபுரை



பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றற்கு, இது பிறனில் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.

151. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.

(இ-ரை.)அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல - தன்னைத் தோண்டு. வாரை விழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.

152. பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.

(இ-ரை.)இறப்பினை என்றும் பொறுத்தல் - பொறை நன்றாதலால், பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க; அதனை மறத்தல் அதனினும் நன்று - இனி, அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப் பொறையினும் நன்றாம்.

பழிக்குப் பழி வாங்கக்கூடிய அல்லது தீங்கு செய்தாரைத் தண்டிக்கக் கூடிய காலத்துப் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறையாதலின், அக் காலமும் அடங்க 'என்றும்' என்றார். இறப்புச் சொல்லிலும் செயலிலும் நெறிகடந்த நடத்தை. அதைப் பொறுத்த காலத்தும் அது உள்ளத்திலிருத்தலால், மறத்தல் அதனினும் நன்றென்றார். மறத்தலாவது தீங்கு செய்தாரை நட்பாகக் கருதுதலும் அவருக்கு நன்மை செய்தலும். 'பொறுத்தல்' வியங் கோள் வினை.

153.இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

(இ-ரை.)இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது விடுதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக்கொள்ளுதல்.