பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - பொறையுடைமை

117



  இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக்காட்டுவமை. ஒரால் ஒருவுதல், உவமியம் பொருள். 

154.நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.

(இ-ரை.) நிறையுடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும்.

     பொறையுடைமையின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு. படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம். 

155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

(இ-ரை.) ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - ஆனால், அத் தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக்கொள்வர்.

    தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனையொத்தலின் 'ஒன்றாக வையார்' என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.

156.ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

(இ-ரை.) ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தாாக்கு உண்டாவது அவ் வொருநாளையின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - ஆனால், அத் தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

  'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால், பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்