பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) பயன் இல பல்லார்முன் சொல்லல் - ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய் லினுந் தீயதாம்.

நயத்தல் விரும்புதல். நயம் விருப்பம். 'நயன்' போலி அறிவுடையோர்க்குப் -பயனில் சொல்லின்மீதுள்ள வெறுப்பின் அளவைக் கூறியவாறு.

193. நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை.

(இ-ரை.) பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப்பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும். அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.

194. நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து.

(இ-ரை.) பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல் சொல் - ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.

சொற்பண்புகள் ஓசையினிமை, இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லுதல் என்பது சொல்லெச்சம். 'சாரா' இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்.

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

(இ-ரை.) நீர்மை உடையார் பயன் இல சொலின் - இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அதனால் அவருடைய உயர்வும் அதுபற்றிய மதிப்பும் நீங்கிவிடும்.