பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/176

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154

திருக்குறள்

தமிழ் மரபுரை


பேறுண்டா மென்பது ஆரியக் கொள்கையே என அறிக. அது அன்பிற்கும் தொண்டிற்கும் தப்பிக்கொள்ளும் சூழ்ச்சியே யன்றி வேறன்று.

இனி, நல்வினையுந் தீவினைபோற் பிறவிக் கேதுவா மென்றும் அதனால் இருவினையும் முறையே பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலாமென்றும், கொண்முடிபு (சித்தாந்த) நூல்கள் கூறுவதும் பிற்காலக் கொள்கையே யென்று தெரிகின்றது. நல்வினையுந் தீவினையுங் கலந்து செய்தவனே நல்வினைப் பயனைத் தேவருலகத்திலும் தீவினைப் பயனைத் தீயுழியிலும் நுகர்ந்து மாறிமாறிப் பிறப்பானென்பதும், தீவினையின்றி நல்வினையே செய்தவன் இறைவன் திருவருளாற் பேரின்ப வீட்டைப் பெறுதலுங் கூடுமென்பதுமே, பண்டைத் தமிழர் கொள்கையாம். இதை

"செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனின்
தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையும் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கை மாய்தறவத் தலையே"

(புறம்.214)

என்னுங் கோப்பெருஞ் சோழன் பாட்டாலும் இளையான்குடி மாற நாயனார் வரலாற்றாலும் அறிக.

இல்லறவியல் முற்றிற்று.