பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/190

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

168

திருக்குறள்

தமிழ் மரபுரை



துறவறத்திற்குரிய தவம், படிப்படியாக வுண்டி சுருக்கிப் பின்பு காய்கனி கிழங்குகளையே வுண்டு இறுதியில் அவையுமின்றி உதிர்ந்த இலைகளையே உட்கொள்வதும், கடுங்கோடையில் நண்பகல் வெயிலிலும் கூதற் காலத்திலும் பனிக் காலத்திலும் குளிர்ந்த நீர்நிலையிலும் நிற்றலும், முதலில் மரவுரி அல்லது நீர்ச்சீலை யுடுத்து இறுதியில் அதுவு மின்றி யிருப்பதும், உள்ளத் தூய்மையைப் பேணுவதும், ஓரறிவுயிர்க்குந் துன்பஞ் செய்யாமையும், பிறவுமாம். இதனொடு சேர்ந்த ஏனை யேழுறுப்புகளும் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

நாற்றிசையும் மூட்டிய விறகுதீயும், தலைக்கு மேற்பட்ட வெயில் தீயுமாகிய ஐந்தீ நாப்பண் நிற்றல் ஆரிய வழக்கமாகத் தோன்றுகின்றது.

261. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை

யற்றே தவத்திற் குரு.

(இ-ரை.) உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும், பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு - தவத்தின் வடிவாம். இத் தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்திபற்றியது. ஏகாரம் தேற்றம்.

262. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை

யஃதிலார் மேற்கொள் வது.

(இ-ரை.) தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும்; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆதலால், அத் தவத்தை முற்பிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.

தவம் பல பிறப்புகளில் தொடர்ந்து செய்ய வேண்டிய அரும்பெரு முயற்சி யாதலாலும், அறிவும் ஆற்றலும் உடையவரே அதை முற்ற முடியச் செய்யத்தக்கவ ராதலாலும், ஒரே பிறப்பில் எல்லாரும் அதை மேற்கொள்ள முடியாதாம்.

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்

மற்றை யவர்க டவம்.