பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - கள்ளாமை

179



'உள்ளத்தால்' என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்திநின்றது. 'உள்ளலும்' இழிவு சிறப்பும்மை. 'அல்' இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந் தீதே எனினுமாம்.

283. களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.

(இ-ரை.) களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உண்டான செல்வம்; ஆவது போல அளவு இறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.

'ஆக்கம்' தொழிலாகு பெயர். அளவிறந்து கெடுதலாவது, புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக்கொண்டு போவதுபோல், தான் போகும்போது முன்பிருந்த பழஞ் செல்வத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு போதலும், இம்மைக்குப் பழியையும் மறுமைக்குத் தீவினையையும் உண்டாக்குதலுமாம்.

284. களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
.

(இ-ரை.) களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை: விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும்.

களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், வீயா விழுமந் தரும்' என்றார்.

285. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

(இ-ரை.) அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையரா யொழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டாகாது.