பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - இன்னாசெய்யாமை

191




312. கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

(இ-ரை.) கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - ஒருவன் தம்மேற் கறுவுகொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - திருப்பித் தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. இதனாற் பழிக்குப் பழி செய்யும் பகைமைபற்றி இன்னா செய்தல் விலக்கப்பட்டது.

313. செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி

னுய்யா விழுமந் தரும்.

(இ-ரை.) செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் - தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமை கொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவு பூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும் - அச் செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத் தரும்.

துன்பமாவது தவமிழத்தலும் கரிசு (பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.

314. இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.


(இ-ரை.) இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்குத் தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது; அவர் நாண நல் நயம் செய்து விடல் - அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ் விரண்டையும் மறந்துவிடுதலாம்.

பிறர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் நினைப்பின் மீண்டுந் தளிர்க்கு மாதலின் முற்றும் மறக்கற்பாலன வாயின.

315. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்

தந்நோய்போற் போற்றாக் கடை.

(இ-ரை.) பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோ ருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து;