பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

111



576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்.

(இ-ரை.) கண்ணோடு இயைந்து கண் ஓடாதவர் - கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்: மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்குதிணைய ராயினும் நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர்.

மரமுங் கண்ணோடியைந்து கண்ணோடாமையின் கண்ணோடாதவர்க்குச் சிறந்த உவமமாயிற்று. இது வினையுவமை. மரக்கண்ணாவது அதன் கணு.

"மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்’ (முத்தொள். 101)

கணுக்கணுவாயிருப்பதால் மூங்கிலுங் கண்ணெனப்படும். புறக்கண் கண்ட வழி ஓடுவது அகக்கண்ணே யாயினும், வழியாயிருத்தல்பற்றியும் பெய ரொப்புமைபற்றியும் பின்னதன் வினை முன்னதன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. கண்ணோடுதல் என்பது ஒருசொற்றன்மைப்பட்டு முதல் வினையாய் நின்றது. 'மரம்' வகுப்பொருமை. மண்ணோடியைந்த மரம் என்பதற்குச் "சுதை மண்ணோடு கூடச்செய்த மரப்பாவை” என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைத்திருப்பது ஒருசிறிதும் பொருந்தாது.

577. கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில்.

(இ-ரை.) கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் - கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையவர் எப்போதேனும் என்ன கரணியம்பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார்.

காட்சியினாற் கொள்ளும் சிறந்த பயன் இன்மையால் 'கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர்' என்றார். அதை வற்புறுத்தவும் குறள் நிரம்பவும் பின்னும் அதை எதிர்மறை முகத்தாற் கூறினார். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

578. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு.

(இ-ரை.) கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட வல்ல அரசர்க்கு;