பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/91

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) வினைக்கண் வினை உடையான் கேண்மை - தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரமும் முழுமுயற்சியுடன் செய்து வருபவன் அவ் வுரிமைபற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவதை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - பொறாமைக்காரர் கோட்சொல்லைக் கேட்டு அரசன் வேறுபடக் கருதுவனாயின், திருமகள் அவனை விட்டு நீங்குவாள்.

உறவுபோல் ஒழுகுதலாவது அரசன் குடும்ப வினைகளிற் கலந்து கொள்ளுதல். அதை மதிப்புக் கேடாகக் கொண்டு அரசன் அவனைத் தண்டிக்கக் கருதுவானாயின், அவன்போல் முழுப் பொறுப்பேற்று உண்மையாக வுழைப்பவர் வேறொருவரு மின்மையால்; அரசன் செல்வங் கெடுமென்பதாம். 'திரு' ஆகுபெயர்.

520. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.

(இ-ரை.) வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால், அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க.

ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும், திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும், அவை யில்லாதாரை வெளிப்படையாகவும் ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும். அரசன் எப்போதும் ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமுமாகிய வினைசெய்வாரைக் கொண்டே ஆட்சி நடாத்துதலால், 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார். ‘மன்னன்’ இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது, அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. 'வினைசெய்வான்' வகுப்பொருமை. ‘உலகு’ உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.

அதி.53 - சுற்றந் தழால் அதாவது, அரசன் தன் உறவினரைத் தன்னினின்று நீங்காமல் அணைத்துக் கொள்ளுதல், வினைச்சுற்றத்திற்கு அடுத்து இனச்சுற்றமும் அரசன் ஆட்சிக்கும் வாழ்விற்கும் உதவுதலின், இது தெரிந்து வினையாடலின் பின் வைக்கப்பட்டது. சுற்றியிருப்பது சுற்றம். தழுவல் தழால். 'ஆல்' தொழிற்பெயரீறு. “செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.” (வெற்றி. 3). செல்வருட் செல்வன் அரசன்.