பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

பிரதாப முதலியார் சரித்திரம்

சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தாள். அப்படி இருந்தும் மாதாவின் மீதுள்ள அன்பு குறையாமல் அவர் திக்குவிஜயஞ் செய்யப் போன இடங்களில் அகப்பட்ட அபூர்வ வஸ்துக்களைத் தாயாருக்கு அனுப்பி வந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கவர்னராகிய அன்டிப்பாட்டர் (Antipater) என்பவரே தேச காரியங்களை நடப்பிக்க வேண்டாமென்றும் அலெக்சாண்டர் எழுதிய கடிதத்துக்கு அவருடைய தாயார் கடுங்கோபமாய் மறுமொழி எழுதியும் அந்த அரசனுக்கு மாதாமேலே எவ்வளவுங் கோபம் உண்டாகவில்லை. அவளுடைய உபத்திரவத்தைப் பொறுக்கமாட்டாமல் அன்டிப்பாட்டர் என்னும் கவர்னர் அலெக்சாண்டருக்கு அநேக கடிதங்கள் அனுப்பினார். அதற்கு அலெக்சாண்டர் சொன்னதாவது: “அன்டிப்பாட்டர் அறுநூறு கடிதங்கள் அனுப்பினாலும் அத்தனைக் கடிதங்களையும் என் தாயாருடைய கண்ணீர்த்துளி அழித்து அபலமாக்கிவிடுமென்பதை அன்டிப்பாட்டர் அறியவில்லை” என்றார்.

புருசியா (Purussia) தேசத்து அரசராகிய பிரடரிக் (Frederick) என்பவர் ஒருநாள் வேலைக்காரனை அழைப்பதற்காக வழக்கப்படி மணியை ஆட்டினார். ஒருவரும் வராதபடியால் அவர் வேலைக்காரனிருக்கிற இடத்தைப் போய்ப் பார்க்க வேலைக்காரன் ஒரு கட்டிலின் மேலே படுத்து நித்திரை செய்துகொண்டிருந்தான். அவனுடைய சட்டைப்பையில் ஒரு கடிதம் நீட்டிக்கொண்டிருந்தபடியால் அவனை எழுப்பாமல் அவர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்து வாசித்தார். அது அந்த ஊழியக்காரனுக்கு அவனுடைய தாயாரால் எழுதப்பட்ட கடிதமாயிருந்தது. அதில் “”மகனே! உன்னுடைய சம்பளத்தில் மிச்சம் பிடித்து என்னுடைய கஷ்ட காலத்துக்கு உதவும்படியாக அனுப்பிக் கொண்டு வருகிறாயே! இந்த உபகாரத்திற்காகக் கடவுள் உனக்குக் கிருபை