பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன் மக்கள் செய்திகள்

169

செய்வார்”” என்று எழுதப்பட் டிருந்தது. உடனே அந்த அரசர் சில தங்க நாணயங்களை அந்தக் கடிதத்துடன் சேர்த்து, வேலைக்காரனுடைய சட்டைப் பையில் மிருதுவாக வைத்துவிட்டு, மறுபடியும் அவருடைய அறைக்குள்ளே போய் மணியை அதிக பலமாக ஆட்டினார். வேலைக்காரன் விழித்துக் கொண்டு அரசருடைய சமூகத்துக்கு ஓடினான். அரசர் அவனைப் பார்த்து ““நீ நல்ல தூக்கம் தூங்கினாய்”” என அவன் ““க்ஷமிக்க வேண்டும்“” என்று பிரார்த்தித்தான். பிறகு தன் சட்டைப்பை கனமாயிருப்பதைக் கண்டு உள்ளே கையைவிட அந்தத் தங்க நாணயங்கள் அகப்பட்டன. அந்தத் தங்க நாணயங்கள் வந்த விவரந் தெரியாமல் அவன் மதிமயங்கி அழுதுகொண்டு அரசனுடைய காலில் விழுந்து ““மகாராஜாவே! யாரோ என் குடியைக் கெடுக்க இந்த நாணயங்களை என் சட்டைப் பையில் வைத்து விட்டார்கள்“” என்றான். உடனே வேந்தன் அவனைப் பார்த்து ““கடவுள் சில சமயங்களில் நித்திரையில் நமக்கு நன்மையை அனுப்புகிறதும் உண்டு. நீ என்னுடைய வந்தனத்துடன் அந்த நாணயங்களை உன் தாயாருக்கு அனுப்புகிறதும் அன்றி உன்னையும் உன் தாயாரையும் கைவிட மாட்டேன் என்று உன் மாதாவுக்குத் தெரிவி”“ என்றார்.

ஆஸ்திரியா (Austria) தேசத்தின் ராஜதானியாகிய வியன்னா (Vienna) நகரத்தில் ஒரு எளிய கைம்பெண்மாது இருந்தாள். அவளுடைய புருஷன் இறந்த பிற்பாடு காலக்ஷேபத்துக்கு மார்க்கமில்லாமல் அவளும் அவளுடைய பிள்ளையும் மகா கஷ்டப்பட்டார்கள். அவளுடைய வறுமையின் நிமித்தமே அவளுக்கு வியாதியுந் துர்ப்பலமும் அதிகரித்தன; சில நாளளவும் படுத்த படுக்கையிலே இருந்தாள். அவளுடைய புத்திரன் அதி பாலியனாயிருந்ததால் அவன் யாதொரு கைத்தொழில் செய்ய அசக்தனாயிருந்தான். அந்தச் சிறுவன் பல வைத்தியர்கள் வீட்டுக்குப் போய்த் தன்னுடைய தாயாருக்கு வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்று பிரார்த்தித்தான்.