பக்கம்:மயில்விழி மான்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

ந்தயம் முடிந்து ஜனங்கள் மைதானத்திலிருந்து வெளியே வரும்பொழுது சற்றே கவனித்துப் பார்த்தீர்களானால், நீங்கள் சிறிதும் எதிர்பாராத மனிதர்கள் பலர் அங்கிருந்து வெளிப்புறப்படுவதைக் காண்பீர்கள். மூன்றாம் வகுப்பில் உங்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர், உங்கள் தகப்பனாரின் சிரார்த்தத்தில் நிமந்திரணத்துக்கு வந்த சாஸ்திரிகள், அன்றைய தினம் சாயங்காலம், திருவொற்றியூரில் தேர் பார்க்கப் போவதாக விடுமுறை பெற்றுச் சென்ற உங்கள் வீடு கூட்டும் வேலைக்காரி முதலியோரைப் பார்த்துத் திடுக்கிடுகிறீர்கள்.

உங்கள் விஷயம் எப்படி ஆனாலும் சரி, டி.கே. ராஜகோபாலன் இப்பொழுது மேற்படி மைதானத்துக்குக் குள்ளிருந்து வெளிவருவதை அவனுடைய தாயார் பார்த்தாளாயின் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவாளென்பதில் சந்தேகமில்லை. ராஜகோபாலன் திருவல்லிக்கேணியில் வசிப்பவன். அவனுக்குத் தபாலாபீஸில் ரூபாய் நாற்பது சம்பளம். தாயாரைத் தவிர மனைவியும் தங்கையும் வீட்டிலிருந்தார்கள். ஜீவனத்துக்கு நாற்பது ரூபாய் போதவில்லை. ஆதலால் அவன் 'நாவல்' எழுதிப் புத்தகப் பிரசுரக் கம்பெனிகளுக்குக் கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தான். அன்று இருபதாம் தேதி. சம்பளம் வர இன்னும் பத்து நாளாகும். மறு நாள் சமையல் பண்ணுவதற்கு வீட்டில் அரிசி, சாமான் ஒன்றும் இல்லையென்று அவன் தாயார் சொன்னாள். இரண்டு மாத வாடகை பாக்கி என்று வீட்டுக்காரன் பிடுங்கி எடுத்தான்.

99—8