பக்கம்:மயில்விழி மான்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மயில்விழி மான்

மனைவி அல்லது குழந்தை செத்துப் போனால் கூட அவ்வளவு துக்கப்படுவார்களா என்பது சந்தேகம். ரெயில் ஓடத் தொடங்கியதும் அவர் அருகிலிருந்த முதலியார் பக்கம் திரும்பினார். "நாலு நாளாய்ப் 'பவானி பிரஸாத்' தான் ஜயிக்க்கப் போகிறது என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியில் உன் பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவராய்ப் போனேன். என் புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்" என்று வெறுப்புடன் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் தமது காலிலிருந்த செருப்பைக் கழற்றினார். பக்கத்திலிருந்தவர்கள் அவர் எங்கே புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ளப் போகிறாரோ என்று பயந்து விட்டனர். அப்படி ஒன்றும் அவர் செய்யவில்லை. பகலெல்லாம் நின்று கால் வலித்தது போலும்! காலைத் தூக்கிச் சப்பணங் கூட்டி உட்கார்ந்தார். "எவனாவது கண் தெரிந்து 'டாபா'மேல் பணங் கட்டுவானா?" என்றார் ஒருவர். "அந்த ரேஸில் அது தான் கெலிக்கப் போகிறது என்று ஸ்பெஷல் தந்தி போச்சே!" என்றார் முதலியார். "உன் தந்தியைக் கொண்டு உடைப்பில் போடு. குதிரையா அது? கழுதை! கடைசியில் அல்லவா வந்தது!" என்றார் நாயுடு. "ஆமாம் ஐயா, எல்லாவற்றிற்கும் கடைசியாக அது எப்படித்தான் வந்ததோ தெரியாது. எனக்கு வந்த கோபத்தில் அதன் மேல் கல்லை விட்டு எறிந்தேன்" என்றார் ஒரு சாயபு.

"தந்திப்படி குதிரை வந்தால் அப்பொழுது மட்டும் என்ன செய்வாய்?" என்று முதலியார் கேட்டார்.