பக்கம்:மயில்விழி மான்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

9

விமான ஓட்டிகள் திசை மாறிச் செலுத்தினார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு சுழற்காற்றிலிருந்து விமானம் தப்பி விட்டதாகத் தெரிந்தது. ஆனால் போகும் திசையையும் அது அடியோடு தவறிவிட்டது. திசையறியும் கருவி வேலை செய்யவில்லை. ரேடியோக் கருவி பழுதாகி விட்டது. விமானம் பறந்து கொண்டேயிருந்தது. ஆனால் எங்கே போகிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. விமான ஓட்டிகளின் மூளைகளும் இதற்குள் குழம்பிப் போயிருக்க வேண்டும். பஸிபிக் சமுத்திரத்தின் ஒரு மூலை பகுதியில் நாங்கள் ஏறியிருந்த விமானம் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. சீக்கிரத்தில் பெட்ரோலும் தீர்ந்து போய்விட்டது.

அவரவர்களுக்கு 'பாராசூட்' கருவியை எடுத்துக் கொண்டு கீழே குதிக்க வேண்டியது தான் என்று அறிவித்து விட்டார்கள்.

கீழே குதித்தால், பஸிபிக் சமுத்திரத்திலேதான் குதிக்க வேண்டும்? அதில் என்ன பயன்? எத்தனை நேரம் உயிரோடு இருக்க முடியும்? அதை விட விமானத்திலிருந்தபடியே விழுந்து உயிர் விடுவது மேல் அல்லவா?

இந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது.

பஸிபிக் சமுத்திரத்தில் லட்சக் கணக்கில் சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்து இவ்வளவு தீவுகள், இங்கிங்கே இருக்கின்றன, என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. கண்டு பிடிக்கப்படாத தீவுகள், ஜன சஞ்சாரமே