பக்கம்:மயில்விழி மான்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மயில்விழி மான்

ஆகப் போய் விட்டது. ஜாக்கி 'புல்' பண்ணி விட்டான். அதற்கு யார் மேல் முட்டிக் கொள்கிறது?"

"குதிரை தின்னுகிறதற்குப் 'புல்' பண்ணினானாக்கும்! 'போமையா போம்' சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுகிறீரே!" என்று முதலியார் பரிகசித்தார்.

"ஒரு சமயம் இப்படி ஒரு சமயம் அப்படித்தான் இருக்கும். கணக்குப் பார்க்க வேண்டியதுதான். குதிரை 'ட்ரையா' 'ட்ரை' இல்லையா என்றும் பார்க்க வேண்டியதுதான்" என்று அதுவரையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த ஓர் ஐயர் சொன்னார்.

இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காதது போல் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், "பாருங்கள், நானும் இருபது வருஷமாய் ரேசுக்குப் போய் வருகிறேன். நான் பணங்கட்டியதைப் போல் ஒருவரும் கட்டியிருக்க மாட்டார்கள். இழவை விட்டுத் தொலைக்கலாமென்றாலோ முடியவில்லை. லாபம் வருகிறதோ இல்லையோ நம் பணம் போகிறது நிச்சயம். நூற்றுக்கு எட்டு வீதம் கிளப்புக்காரன் எடுத்துக் கொண்டு விடுகிறான். போதாததற்கு உள்ளே வர டிக்கெட், ரெயில் செலவு, கவலை, கால விரயம் எல்லாம்" என்று பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

ராஜகோபாலனுக்குப் பக்கத்தில் பெரிய மனிதர் போன்றிருந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

"இவர்கள் என்னமோ சொல்லுகிறார்கள்? குதிரைப் பந்தயம் என்றால், நாலாயிரம், ஐயாயிரம்