பக்கம்:மயில்விழி மான்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

125

லகத்து மக்களை இட்டார் என்றும், இடாதார் என்றும் பிரித்து, "சாதியிரண்டொழிய வேறில்லை" என்றாள் ஔவை. அந்தக் கிழவிக்குப் பின்னால் இன்னும் அநேகர் ஜனங்களை இரு பிரிவாக்க முயன்றிருக்கின்றனர். வெள்ளைக்காரர் - கறுப்பு மனிதர், முதலாளிகள் - தொழிலாளிகள், கடன் கொடுப்பவர் - கடன் வாங்குபவர், பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற பிரிவுகளைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் சென்னை நகர மாந்தரைப் பொறுத்த வரையில் இந்தப் பிரிவுகளையெல்லாம் விட, "குதிரைப் பந்தயத்திற்குப் போகிறவர் - போகாதவர்" என்ற பிரிவினை அதிகப் பொருத்தமாயிருக்கும். சீனு இந்த நிலைமையை அறிந்தவன். ஜனங்களின் மனோபாவத்தை அவன் நன்கு கண்டிருந்தான். ஆதலின், அவனுடைய யுக்தி ஆச்சரியகரமான பலனை அளித்தது.

ராயல் தியேட்டரில் "தப்பிலி கப்" நாடகம் போடப்பட்ட அன்று அந்தப் பெரிய கொட்டகை முழுவதும் ஏறக்குறைய நிறைந்திருந்தது. குதிரைப் பந்தயத்துக்குப் போவோர் இயல்பாக அந்த நாடகத்தின் பெயரினாலேயே கவரப்பட்டு வந்து சேர்ந்தனர்.

குதிரைப் பந்தயத்திற்குப் போகாதவர்களோ தங்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் குதிரைப் பந்தயத்திற்குப் போய்க் கெட்டுப் போவதைத் தடுப்பதற்கு இந்த நாடகம் பயன் படலாமென்ற நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, கொட்டகை நிரம்பிற்று.