பக்கம்:மயில்விழி மான்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

35

வசித்த தமிழர்களைக் கண்டு பிடித்தான். அவன் அவர்களைத் தாக்குவதற்கு முன்னால், அந்தத் தமிழர்கள் தயாராக வைத்திருந்த கப்பலில் ஏறிக் கொண்டு கிழக்குக் கடலில் கிளம்பினார்கள். முரன் உடனே தானும் ஒரு கப்பலை அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டு கிளம்பினான். இரண்டு கப்பல்களும் வெகுதூரம் கிழக்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு ஒரு பெரிய சண்டமாருதத்தில் சிக்கிக் கொண்டன. கப்பல்கள் உடைந்தன. ஒரு கப்பல் ஒரு தீவின் அருகிலும் இன்னொரு கப்பல் இன்னொரு தீவின் அருகிலும் சென்று அடைந்தன. அதாவது ஒரு தீவில் இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதனும் அவனுடன் வந்தவர்களும் இறங்கினார்கள். இன்னொரு தீவில் முரனும் அவனுடைய சகாக்களும் இறங்கினார்கள். கப்பல்கள் இரண்டும் சிதைந்து சின்னாபின்னமுற்றுக் கடலில் மறைந்து மூழ்கி விட்டன.

தமிழர்கள் ஒரு தீவிலும், முரனாதி அசுரர்கள் இன்னொரு தீவிலும் குடியேறினார்கள். தலைமுறை தலை முறையாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்கள். வெளி உலகத்துச் செய்திகள் ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தீவுகளிலும் பெரிய மரங்கள் இல்லாதபடியால் கப்பல் கட்டிக் கொண்டு பிரயாணம் கிளம்ப முடியவில்லை. ராட்சஸர்கள் சில சமயம் பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று தின்பதற்காகச் சமயம் பார்த்து வருவார்கள். சில சமயம் சிறு படகுகளிலும் சில சமயம் நீந்தியும் வருவார்கள். வருஷத்தில் ஒரு மாத காலம் சுறா மீன்கள்