பக்கம்:மயில்விழி மான்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மயில்விழி மான்

"நான் இன்றைக்கு உயிரோடிருப்பதும், உம்முடன் இந்த வண்டியில் ஏறி வருவதும் மிக மிக அதிசயமான காரியங்கள். ஆறு மாதத்துக்கு முன்பே என் ஆயுள் முடிந்திருக்க வேண்டியது. என்னுடைய அதிசயமான அநுபவத்தைத் தமிழ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னைக் காப்பாற்றி இவ்வளவு நாள் உயிரோடு வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். இறைவனுடைய கருணையையும் ரொம்பச் சோதிக்கக் கூடாது அல்லவா? ஆகையால் இதோ என் கதையை ஆரம்பித்து விடுகிறேன். ஆமாம்; கதை போலத் தான் இருக்கும். உண்மையில் நடந்தது என்று சொன்னால், யாரும் நம்பப் போவதில்லை. ஆகையால் கதையென்று சொல்லிவிடுவதே நல்லது. நீரும் என் அநுபவத்தை எழுதுவதாயிருந்தால், 'இந்தக் கதையில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் எல்லாம் கற்பனையே; யாரையும் குறிப்பிடவில்லை' என்று திட்டமாக அறிவித்து விடுவது நல்லது!" என்று சொன்னார்.

1

சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால் என் பெயரைப் பத்திரிகைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவுக்குப் பிரியாணமான ஓர் ஆகாச விமானம் காணாமற் போய்ப் பல நாள் வரை யாதொரு தகவலும் தெரியாமலிருந்ததல்லவா? அந்த விமானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மயில்விழி_மான்.pdf/7&oldid=1547475" இலிருந்து மீள்விக்கப்பட்டது