பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

111



இந்த அரிய பண்புகளைக் கண்ட பிரான்ஸ் நாட்டு வீரர் பெருமக்கள், மாவீரன் நெப்போலியனுக்காக, எப்படிப்பட்ட தியாகத்தையும், ஏன் அவரவர்கள் உயிர்களையே கூடத் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.

படை வீரர்களிடம் நெப்போலியன் அவ்வாறு நடந்து கொண்டதற்கும் ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. என்ன தெரியுமா அது?

‘அறிவு, திறமை, வலிமை இந்த மூன்றும்தான் உலகத்தை ஆட்சி புரிகிறதே அல்லாமல், படிப்பறிவற்ற, பாமரக் கூட்டத்தின் பெரும்பான்மை பலத்தால் ஆள முடியாது’ என்பது அந்த உலகப் பெருவீரனான நெப்போலியனது அரசியல் சித்தாந்தமாகும்.

அந்த பாமரக் கூட்டத்தை அழிவுத் துறையிலோ - ஆக்கப் பாதையிலோ செலுத்துவது, திறமையும் - வலிமையும் ஆகும். எனவே, படிப்பறிவற்ற பொது மக்களை அலட்சியமாகக் கருதி, தனிப்பட்ட மனித நேயத்தோடும், கம்பீரமாக, கண்ணியமாக, கடமையாற்றும் கருணையோடும் அவர்களிடம் நடந்து கொண்டான் நெப்போலியன்!

இத்தகைய ஒர் அற்புத பெருமை, மதிப்பு, எந்த சரித்திர நாயகனுக்கும் அன்று வரை, ஏன், இன்றுவரையும் கூட எவருக்கும் உருவானதில்லை என்பதை, நாம் வரலாற்று ஏடுகளிலே இன்றும் காண்கின்றோம்.

அத்தகைய ஓர் உலக மாவீரன் போர்ப் படையிலே ஒரு வீரனாகப் பணியாற்றியவர் லூயி பாஸ்டியரின் தந்தையான ஜோசப் பாஸ்டியர் என்பவர்.

இந்த ரணகளச் சூரர் தனது வீரத்தாலும், திறமையாலும், படை வீரர்களுக்குள்ளே சுடர்விட்டு எரியும் தியாக உணர்வுகளாலும் இந்த பாஸ்டியர், நெப்போலியனுடைய அன்பைப் பெற்ற நேர்முகத் தளபதிகளில் ஒருவரானார்!