பலவகை விளையாட்டுகள்
மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த விளையாட்டுப் பொருள்களில் கோலிகளே மிக்குள்ளன. எனவே, அந்நகரச் சிறார் கோலி விளையாட்டில் பெரு விருப்பம் கொண்டிருந்தனர் என்பது தேற்றம் களிமண் பந்துகள் பல மாதிரிக்காகச் செய்யப்பட்டுள்ளன. அவற்றால், சிறார் பந்து விளையாட்டிலும் பண்பட்டிருந்தனர் என்பது வெளியாகிறது. பெரியவர்கள் சதுரங்கம் சொக்கட்டான் முதலிய ஆட்டங்களை ஆடிவந்தனர். பாய்ச்சிகள் இக்காலத்தன போலவே புள்ளியிடப்பட்டுள்ளன. சதுரங்கம் ஆடுதற்குரிய காய்கள் மண்ணாலும் உறுதியான கற்களாலும் அழகுறச் செய்யப்பட்டுள்ளன. அவை பல நிறங்களைப் பெற்றுள்ளன. அவற்றை வைத்து ஆடுதற்குரிய சதுரங்கப்பலகைகள் மரத்தால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்; நாளடைவில் அவை அழிந்து போயிருத்தல் வேண்டும்! அப்பல்கைகளில் சதுரச் சிப்பிகள் பதித்துக் கட்டங்கள் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இச்சதுரச் சிப்பிகள் பல இந்நகர ஆராய்ச்சியிற் கிடைத்துள்ளன. இங்ஙனம் சதுரங்க விளையாட்டிற்குரிய சாதனங்கள் பல ‘உர்’ நகரத்திலும் கிடைத்துள்ளன. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த ஒரு செங்கல் மீது நீள் சதுரக் கட்டங்கள் நான்கு ஒரே வரிசையில் இருப்பன போல மூன்று வரிசைகள் காணப்படுகின்றன. அக்கல் மற்றொரு வகைச் சதுரங்கப்பலகையாகப் பயன்பட்டிருக்கலாம். அதன் மீதுள்ள கட்டங்களுள் ஒன்று குறுக்குக் கோடுகளுடன் (இப்பொழுது காணப்படும் ‘மலை’ போலக்) காணப்படுகிறது. பிறிதொரு கல்மீது தாய விளையாட்டுக்கு உரிய கோடுகள் காணப்படுகின்றன. இத்தகைய விளையாட்டுகள் பல உர், எகிப்து ஆகிய இடங்களிலும் பழக்கத்தில் இருந்தன.