பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வஞ்சிமாநகரம்


 “என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளோ?” - இதற்கு மறு மொழி கூறுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் குமரனுக்கு நாக்குழறியது. அவனுடைய அந்தப் பலவீனத்தை மேலும் தொடர்ந்து தாக்காமல், “அதனால் என்ன குமரா? பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தக்க சமயம் பார்த்துக் கவனித்து செயல்பட வேண்டியது உன் கடமைதானே?” என்று அந்தப் பேச்சையும் சுபாவமாகத் திருப்பினார். அடுத்தாற்போல அவர் கேட்ட கேள்விதான் பெருஞ் சந்தேகத்தைக் கிளரச் செய்வதாயிருந்தது.

“ஆமாம் ! உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் குமரா I கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்கு அருகே ஓர் அழகிய பூந்தோட்டம் உண்டல்லவா?”

“ஆம் ! உண்டு....”

“அந்தப் பூந்தோட்டம் முன்போலவே இப்போதும் செழிப்பாயிருக்கிறதா? கொடுங்கோளுர் நகரத்தில் எனக்கு மிகவும் விருப்பமான இடம், இயற்கையழகு கொழிக்கும் அந்தப் பூந்தோட்டம்தான்.”

இப்போது மறுமொழி கூற நாக்குழறியது அவனுக்கு.

“என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா ! பூங்காக்களையும், பொழில்களையும் உன் போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள்தான் நன்றாக அநுபவிக்க முடியும் என்றாலும் என் போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒருநாளும் போய் விடுவதில்லை.”

அந்தப் பூங்காவைப் பற்றி அவருடைய பேச்சு வளர வளர அவனுடைய பயம் அதிகமாகியது. பேச்சு எங்கே எப்படி வந்து முடியும் என்பதை அவனால் கணிக்க முடியாமல் இருந்தது. தன்னை வரச்சொல்லியிருந்த காரியங்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக இப்படிப்பூங்காவைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார்