பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வஞ்சிமாநகரம்



அதே வேளையில் படகில் உடன்வரும் சேரநாட்டு வீரர்களோ ஒன்றுமே தெளிவாகப் புரியாமல் தயங்கவும் கூடும். குமரன் நம்பியே பொன்வானி முகத்துவாரத்தில் எதிர்கொண்டு வரவேற்பான் என்று எதிர்பார்த்தபடியே படகில் வரும் ஆந்தைக் கண்ணனின் வீரர்களுக்கு யாருமே தங்களை எதிர்கொள்ளாத இந்த நிலை வியப்பைத் தராமல் போகாது.

தாங்கள் கரைசேரப் போவதையோ, கடம்பர்களின் கைகளிலே சிக்கி அழியப்போவதையோ - எதையுமே நிர்ணயிக்க முடியாமல் படகில் உடன் வரும் கொடுங்கோளுர் வீரர்களும் மனம் குழம்பிப்போய் குமரன்நம்பியின் மேற் கோபமாயிருப்பார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் படகில் வருகிற கடம்பர்களை அழிக்கவும் உடன்வருகிற கொடுங்கோளுர் வீரர்களை அழியாமல் காப்பாற்றிக் கரை சேர்த்து மீட்கவும் ஒரே சமயத்தில் முயல வேண்டிய நிலையில் இருந்தான் அவன்.

தீவிரமாக அவன் இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த சமயத்தில் வலியனும் பூழியனும் அருகில் வந்து ஏதோ பேச்சுக் கொடுத்தார்கள். உள்ளுற அவர்கள் இருவர் மேலும் அவனுக்குத் தாங்க முடியாத கோபம் ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் இருந்தது.

“நாம் இங்கிருந்து அனுப்பிய செவிட்டூமை ஒற்றன் இன்னும் திரும்பி வரவில்லை. அந்த ஒற்றனை மட்டும் ஆந்தைக் கண்ணன் ஏன் திருப்பி அனுப்பவில்லை என்பது உங்களுக்கு சந்தேகத்தை அளிக்கவில்லையா படைத்தலைவரே!” - என்று பரபரப்படைந்து வினவினான் வலியன்.

“ஒற்றன் ஏன் திரும்பி வரவில்லை என்று கவலைப்படுவதை விட வந்திருப்பவர்களில் நமக்கு வேண்டியவர்களை எப்படிக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது என்பதைப்பற்றிக் கவலைப்படுவது