பக்கம்:வழிப்போக்கன்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

“மலர் கசங்கிய போதிலும் அதற்குள்ள மணம் போய் விட வில்லையே?”

“உனக்குத் தூக்கம் வரவில்லையா?”

“எனக்குத் தூக்கம் வராது...”

மணி பதினொன்று இருக்கும். பலமாக வந்த மழையை வேகமாக காற்று எங்கேயோ அடித்துக்கொண்டு போய்விட்டது.

சகுந்தலா மெதுவாக எழுந்து சுந்தரின் முகத்தைப் பார்த்தாள். அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது. சகுந்தலா அவனுடைய தழும்பேறிய தலையையும் வலது கையையும் தொட்டுப் பார்த்தாள். அவள் கண்கள் சிந்திய வெம்பனித் துளிகள் அவன்மீது விழுந்தன. பிறகு...பேதையின் உள்ளத்தில் என்னென்னவோ எண்ணங்கள்! ஆசைகள்! அப்புறம் அவள் எப்போது தூங்கினாளோ? காலையில் கண்விழித்துப் பார்த்தபோது.சுந்தரைக் காணவில்லை, சுந்தர் எங்கே?

சுந்தரம் கண்விழித்துப் பார்த்தபோது சகுந்தலாவின் குருத்து போன்ற தந்தக் கரங்கள் தன்மீது கொடியோடியிருப்பதைக் கண்டான். அந்தக் கொடிகளை மெதுவாக அப்பால் நகர்த்திவிட்டு சந்தடி செய்யாமல் மூன்று மணி ரயிலுக்கே எழுந்து போய்விட்டான். அவள் பெருமூச்சு விட்டாள். ஆண் பெண் உறவுக்குச் சமூகம் விதித்திருந்த எல்லைக்கோட்டை மீறி விடுவதற்கு இருந்த தன்னை, இயற்கையின் சக்திக்குப்பலியாகி விடுவதற்கு இருந்த தன்னை, சுந்தரம் காப்பாற்றி விட்டான் என்பதை அறிந்தபோது அவள் பரவசமானாள்.

“அவர் எத்தனை உத்தமமானவர்!” அவள் பெருமூச் செறிந்தாள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு விநாடியும் ஒரு வெறியல்லவா? இரவு அவள் விட்ட பெரு மூச்சுகளுக்கும் எத்தனை வித்தியாசம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/116&oldid=1315369" இலிருந்து மீள்விக்கப்பட்டது