பக்கம்:வழிப்போக்கன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


கொண்டே சுந்தர் விளக்கை அணைக்க எழுந்தான். சகுந்தலா வுக்கு இருட்டென்றால் ஒரே பயம் என்பது அவனுக்குத் தெரியும்.

“ஐயோ சுந்தர் வேண்டாம், வேண்டாம். எனக்குப் பயமாயிருக்கு!” என்று பதறினாள் அவள்.

“எதுக்கு வந்தேன்னு சொல்லு?”

“உன்னைப் பார்க்கத்தான்!”

“அப்படி வா, வழிக்கு; ஓர் ஆண்பிள்ளை தனியாயிருக்கிற இடத்துக்கு ஒரு பெண் பிள்ளை வரலாமா!”

“வந்தால் என்னவாம்?”

“வரக் கூடாது!”

“சரி, அப்படின்ன நான் போறேன்” சகுந்தலா திரும்பினாள்.

“நீ போகக்கூடாது.”

“நீதானே வரக்கூடாது என்றாய்?”

“ஆமாம்; இப்போ போகக்கூடாதுன்னு சொல்றேன்!” சுந்தர் அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு அவளுடைய முகத்தையே பார்த்தான். “இந்தப் பின்னலும் நேர் வகிடும் உனக்கு எவ்வளவு அழகாயிருக்கு, தெரியுமா?” என்றான்.

“ம்ம்ம்......உனக்குக்கூடத்தான் இந்தக் கிராப்பும் கோணல் வகிடும் ரொம்ப நன்றாயிருக்கு” என்றாள் சகுந்தலா.

“அதுக்கு ஏன் பெருமூச்சு விடறே?”

“உனக்குத் தலைவாரிப் பின்ன முடியலையேன்னுதான்!”

“அப்படின்னா மறுபடியும் குடுமியே வைத்துக் கொள்ளட்டுமா?”

“ஐயோ, வேண்டாம்! உன் கிராப்புத் தலையை வேண்டுமானால் வாரி விடட்டுமா இப்போ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/23&oldid=1315922" இலிருந்து மீள்விக்கப்பட்டது