பக்கம்:வழிப்போக்கன்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

“சுவர்களுக்கும் காது உண்டு. பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே” என்று எச்சரித்தார் மற்றொருவர்.

சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறும் புரட்சி பற்றி இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஆயினும், வெளியேறுவதைப் பற்றி நினைக்கும் போதே எல்லோருக்கும் உற்சாகம் பிறந்தது. எல்லோரையும்போல் சுந்தரமும் அந்தப் புரட்சி தினத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

12

ன்று திங்கட்கிழமை. விநாயக சதுர்த்தி தினம். கைதிகள் எல்லோரும் காலையில் கஞ்சியைக் குடித்துவிட்டு அவரவர்கள் இஷ்டம்போல வெட்ட வெளியில் சுற்றிக்கொண்டும், பேசிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்கள்.

“போன விநாயக சதுர்த்திக்கு வீட்டிலே கொழுக்கட்டை சாப்பிட்டேன். இந்த விநாயக சதுர்த்திக்கு வெறும் கஞ்சி தான்!” என்றார் எம். ஏ. பி. எல். சுந்தரம் சிரித்தான்.

மணி ஏழரை இருக்கும். திடீரென்று சிறைச்சாலைக்குள் நாலா திசையிலும் விசில் ஒலி பயங்கரமாகக் கேட்டது. நீலத் தொப்பி அணிந்த வார்டர்கள் எமக் கிங்கரர்களைப் போல கையில் குண்டாந்தடியுடன் ஓடி ஓடிக் கைதிகளை விரட்டிக் கொண்டிருந்தார்கள். சிறையைச் சுற்றிலும் ரிசர்வ் போலீசார் கையில் துப்பாக்கி சகிதம் அணிவகுத்து நின்று கொண்டிருந்தார்கள்.

“ஐயோ ஐயோ” என்ற அலறலும் “ஓடு ஓடு” என்ற கூக்குரலும், விசில் ஊதலும் சேர்ந்து சிறை முழுவதும் எமலோகமாக மாறிக் காட்சி அளித்தது. கைதிகள் தங்கள் தங்கள் பிளாக்குகளை நோக்கி ஓடி, மூலைக்கு மூலை பதுங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/95&oldid=1322821" இலிருந்து மீள்விக்கப்பட்டது