பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

15


மறக்கக்கூடாது என்பதில் முழு அக்கறை செலுத்துகிறார்கள். சான்றாகக் கூறுவதென்றால் மாணவிகள் புடைவைகட்டிக் கொண்டு தான் வரவேண்டும் என்ற விதியை முழுமையாகப் பின்பற்றுகிறார்கள், ஆகவே நம்முடைய சமுதாயம் வாழ வேண்டுமென்றால் ஆண்களுடைய மனமும் மாறவேண்டும். பெண்ணினுடைய மனமும் மாறவேண்டும்.

கலிங்கத்துப் பரணியில் நம்முடைய சமுதாயத்தின் பெருமையை, பெண்ணினுடைய பெருமையை எந்த அளவிற்கு நம்முடைய மூதாதையர் எண்ணி வந்தார்கள்; எப்படி வாழ்ந்தார்கள் என்பதை உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். கலிங்கத்துப் பரணியிலே ஓர் அழகான பாடல்; பெண்ணினுடைய பெருமையைப் போற்றுகின்ற பாடல். புறநானூற்றுக் காலத்திலே பெண்கள் பெரும் புலவர்களாய்த் திகழ்ந்தார்கள். நாட்டை ஆண்டார்கள். நல்லன கூறித் தீயன களைந்தார்கள். இத்தகு உயர்ந்த பெண்களைக் கொண்டு விளங்கியது நம் தமிழ்ச் சமுதாயம்.

கலிங்கத்துப் பரணியில் ஓர் அழகான பாடல்.

“தரைமகடன் கொழுநன்ற னுடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளி ரவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின்! காண்மின்!

இப்பாடலில், போரிலே மார்பில் அடிபட்டுக் கீழே விழ இருந்த தலைவனைத் தரைமகள் தீண்டக்கூடாது என்று தன் மடியிலே தாங்கிய மனைவி, அவன் விண்ணுலகம் சென்றால் அவனைத் தேவமகளிர் தீண்டிவிடுவார்களோ என எண்ணி அவனுக்கு முன்னதாகத் தன்னுயிரை விட்டு அங்குச் சென்று அணைத்துக் கொண்டாள். இதிலிருந்து அக்காலப் பெண்களின் பெருமை நன்கு விளங்குகிறது. ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்ந்த காலம் அது,