பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வள்ளியம்மாள் கல்வி அறம்


பெற்றோரின் இடையே எழுப்பப்படும் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்குப் பெண்மகளே அங்கு முனைகிறாள். அத்தகைய பொறுமைக் குணம் உடையவள் பெண்.

“மாதர் முகமே எனது புத்தகம்” என்றார் ரூசோ. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்றார் வள்ளுவர். ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்றார் கவிமணி. ஆகவே, பெண்கள் தாம் வாழ்விற்கு அடிப்படை. அவருடைய பெருமையைக் கருதித் தான் முன்னோர்கள் 'தாய்நாடு' என்று கூறுகின்றார்களே தவிர, தகப்பன் நாடு என்றோ, அண்ணன் நாடு என்றோ தம்பி நாடு என்றோ சொல்லவில்லை.

பிறந்த குழந்தைகூட முதன் முதலில் தாய்மொழியில் 'அம்மா' என்றுதான் அழைக்கின்றது. இறைவனைப் பாராட்டும்போது கூட அம்மையே அப்பா என்றும், உமையொருபாகன் என்றும், லஷ்மி நாராயணன், ராதா கிருஷ்ணன், வள்ளிமணாளன், ஆதிபராசக்தி என்றும் பெண்ணிற்கு முதன்மை கொடுக்கின்றனர். தாய்த்திரு நாட்டைப் பாரதி பாராட்டுகின்றபோது,

“வந்தே மாதரம் என்போம் எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

என்று பாடியுள்ளார். பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டிய நீங்கள் மேன்மேலும் சிறந்த கல்வியைக் கற்று இந்த அறக்கட்டளைக்குப் புகழ் சேர்க்க வேண்டும்.

புகழ் வாய்ந்த இயேசு, புத்தர், விவேகானந்தர், வீரசிவாஜி போன்றவர்கள் தங்களை ஈன்றெடுத்த அன்னையர் மூலம் சிறந்த அறிவு, ஆற்றல், அன்பு இவற்றைப் பெற்று மேன்மையுற்றது போல நீங்கள் நன்மக்களாக விளங்கிக் கல்லூரிக்குப் புகழைச் சேர்க்க வேண்டும்,