பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


(2) இந்த உறுப்பின்படி சாற்றம்செய்யப்பட்ட ஓர் அவசரச் சட்டம், மாநிலச் சட்டமன்றம் இயற்றி ஆளுநரால் ஏற்பிசைவளிக்கப்பட்ட சட்டம் ஒன்றிற்குள்ள அதே செல்லாற்றலும் செல்திறமும் உடையது ஆகும்; ஆனால், அத்தகைய அவசரச் சட்டம் ஒவ்வொன்றும்

(அ)மாநிலச் சட்டமன்றப் பேரவையின் முன்பு அல்லது சட்டமன்ற மேலவை உள்ள மாநிலத்தில், ஈரவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும், சட்டமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்கள் கழிவுற்றவுடன் அல்லது அக்காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே அதற்கு ஒப்பேற்பு அளிக்க மறுக்கும் ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி, அதனைச் சட்டமன்ற மேலவை, ஏதேனுமிருப்பின், அதுவும் ஏற்றுக்கொண்டிருக்குமாயின், அத்தீர்மானம், அவ்வாறு நிறைவேற்றப்பட்டதன் மேல் அல்லது அத்தீர்மானத்தை மேலவை ஏற்றுக்கொண்டதன்மேல், செயற்பாடு அற்றுப்போகும்; மேலும்,
(ஆ) ஆளுநரால், எச்சமயத்திலும், விலக்கிக்கொள்ளப்படலாம்.

விளக்கம்.-சட்டமன்ற மேலவை உள்ள ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அவைகள் வெவ்வேறு தேதிகளில் மீண்டும் கூடுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்குமிடத்து, இந்தக் கூறினைப் பொறுத்தவரை, அந்த ஆறு வாரக் காலஅளவு அத்தேதிகளில் பிந்திய தேதியிலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

(3) மாநிலச் சட்டமன்றம் இயற்றி ஆளுநரால் ஏற்பிசைவளிக்கப்பட்ட சட்டம் ஒன்றில் இடம்பெற்றிருந்தாலும் எத்தகைய வகையம் செல்லுந்தன்மையற்றுப்போகுமோ அத்தகைய வகையம் எதனையும், இந்த உறுப்பின்படியான ஓர் அவசரச்சட்டம் கொண்டிருப்பின், அந்த அளவிற்கு அது இல்லாநிலையது ஆகும்: வரம்புரையாக: ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள ஒரு பொருட்பாடு குறித்த நாடாளுமன்றச் சட்டத்திற்கோ நிலவுறும் சட்டம் ஒன்றிற்கோ முரண்படும் மாநிலச் சட்டமன்றச் சட்டத்தின் செல்திறம் பற்றிய இந்த அரசமைப்பின் வகையங்களைப் பொறுத்தவரை, குடியரசுத்தலைவரின் நெறிவுறுத்தங்களை ஒட்டி இந்த உறுப்பின்படி சாற்றம்செய்யப்பட்ட அவசரச் சட்டம் எதுவும், குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு அவரால் ஏற்பிசைவளிக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு சட்டமாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் V

மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்கள்

214. மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றங்கள் :

மாநிலம் ஒவ்வொன்றுக்கும் ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும்.

215. உயர் நீதிமன்றங்கள் நிலையாவண நீதிமன்றங்களாக இருக்கும் :

உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும்; மேலும், தன்னை அவமதித்ததற்காகத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளடங்கலாக, அத்தகு நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்கள் அனைத்தையும் அது உடையதாக இருக்கும்.

216. உயர் நீதிமன்றங்களின் அமைப்பு :

உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும், தலைமை நீதிபதி ஒருவரையும், குடியரசுத்தலைவர் தேவையெனக் கருதி அவ்வப்போது அமர்த்தும் பிற நீதிபதிகளையும் கொண்டதாக இருக்கும்.

217. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் அமர்த்துகை மற்றும் அப்பதவிக்கான வரைமுறைகள் :

(1) உயர் நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும், குடியரசுத்தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியையும் மாநில ஆளுநரையும் கலந்தாய்வு செய்த பின்பும், தலைமை நீதிபதி அல்லாத பிற நீதிபதி ஒருவரின் அமர்த்துகையைப் பொறுத்தவரை, கூடுதலாக அந்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கலந்தாய்வு செய்த பின்பும் தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின்வழி அமர்த்துவார்; மற்றும், அவர் ஒரு கூடுதல் அல்லது செயலுறு நீதிபதியாக இருப்பின், 224 ஆம் உறுப்பில் வகைசெய்யப்பட்டுள்ளவாறும், பிற நேர்வு எதிலும், அவர் அறுபத்திரண்டு வயது நிறைவெய்தும் வரையிலும் பதவி வகிப்பார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/107&oldid=1468732" இலிருந்து மீள்விக்கப்பட்டது