பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


(4) செய்தித் தொடர்புச் சாதனங்களை அமைத்தல் அல்லது அவற்றைப் பேனிவருதல் குறித்து (2) ஆம் கூறின்படியோ இருப்புப்பாதைகளைப் பாதுகாப்பதற்கென எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து (3)ஆம் கூறின்படியோ மாநிலம் எதற்கும் இடப்பட்ட பணிப்புரை எதனையும் நிறைவேற்றுகையில், அத்தகைய பணிப்புரை இடப்படாத நிலையில் அந்த மாநிலத்தின் வழக்கமான கடமைகளை ஆற்றுவதற்கு ஏற்படக்கூடிய செலவு எவ்வளவோ அதைவிடக் கூடுதல் செலவுகள் செய்யப்பட்டிருக்குமிடத்து அந்த மாநிலம் செய்யநேர்ந்த கூடுதல் செலவடைகள் பொறுத்து ஒப்பியவாறான தொகையையோ, அவ்வாறு ஒப்புதல் ஏற்படாதவிடத்து, இந்தியாவின் தலைமை நீதிபதியால் அமர்த்தப்பெறும் ஒரு பொதுவர் தீர்மானிக்கும் தொகையையோ அந்த மாநிலத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.

[1][257அ. ★★]

258. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் முதலியவற்றை வழங்குவதற்கு ஒன்றியத்திற்குள்ள அதிகாாரம் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் அடங்கிய பொருட்பாடு ஒன்றன் தொடர்பான செயற்பணிகளை, வரைக்கட்டுடனோ வரைக்கட்டின்றியோ, ஒரு மாநில அரசாங்கத்தின் இசைவுடன், அந்த அரசாங்கத்திடம் அல்லது அதன் அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம்.

(2) நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு, மாநிலம் எதற்கும் பொருந்துறுகிற ஒரு சட்டம், அது அந்த மாநிலச் சட்டமன்றம் சட்டமியற்றுவதற்கு அதிகாரம் பெற்றிராத ஒரு பொருட்பாடு பற்றியதாக இருந்தபோதிலும், அந்த மாநிலத்திற்கு அல்லது அதன் அலுவலர்களுக்கும் அதிகாரஅமைப்புகளுக்கும், அதிகாரங்களை வழங்கி, கடமைகளை விதிக்கலாம் அல்லது அதிகாரங்களை வழங்குவதற்கும் கடமைகளை விதிப்பதற்கும் அதிகாரம் அளிக்கலாம்.

(3) இந்த உறுப்பின் பயன்திறன்வழி ஒரு மாநிலத்திற்கு அல்லது அதன் அலுவலர்களுக்கு அல்லது அதிகாரஅமைப்புகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்குமிடத்து அல்லது கடமைகள் விதிக்கப்பட்டிருக்குமிடத்து, அந்த அதிகாரங்களைச் செலுத்துவதையும் கடமைகளை ஆற்றுவதையும் பொறுத்து அந்த மாநிலம் செய்ய நேர்ந்த கூடுதல் நிருவாகச் செலவுகள் குறித்து, ஒப்பியவாறான தொகையையோ, அவ்வாறு ஒப்புதல் ஏற்படாதவிடத்து, இந்தியாவின் தலைமை நீதிபதியால் அமர்த்தப்பெறும் ஒரு பொதுவர் தீர்மானிக்கும் தொகையையோ அம்மாநிலத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.

258அ. ஒன்றியத்திடம் செயற்பணிகளை ஒப்படைப்பதற்கு மாநிலங்களுக்குள்ள அதிகாரம் : இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், மாநிலம் ஒன்றின் ஆளுநர் அந்த மாநிலத்தின் ஆட்சி ஆதிகாரத்தில் அடங்கிய பொருட்பாடு ஒன்றன் தொடர்பான செயற்பணிகளை இந்திய அரசாங்கத்தின் இசைவுடன் வரைக்கட்டுடனோ வரைக்கட்டின்றியோ, அந்த அரசாங்கத்திடம் அல்லது அதன் அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம்.

[2][259. ★★]

260. இந்தியாவிற்கு வெளியிலுள்ள நிலவரைகள் தொடர்பாக ஒன்றியத்திற்குள்ள அதிகாரம் :

இந்திய அரசாங்கம், இந்திய ஆட்சிநிலவரையின் பகுதி அல்லாத நிலவரை ஒன்றன் அரசாங்கத்துடன் செய்து கொள்ளும் உடன்பாட்டின் வாயிலாக, அந்த நிலவரையின் அரசாங்கத்திடம் உற்றமைந்துள்ள ஆட்சித்துறை, சட்டமியற்று துறை அல்லது நீதித் துறை சார்ந்த செயற்பணிகள் எவற்றையும் மேற்கொள்ளலாம்; ஆனால், அத்தகைய உடன்பாடு ஒவ்வொன்றும், அயல்நாட்டில் அதிகாரம் செலுத்துவது தொடர்பாக நிகழுறு காலத்தில் செல்லாற்றலிலுள்ள சட்டத்திற்கு உட்பட்டதாகவும் அதன்வழி அமைவதாகவும் இருத்தல் வேண்டும்.


  1. 1978ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் 33ஆம் பிரிவினால் நீக்கறவு செய்யப்பட்டது.
  2. 1956ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29ஆம் பிரிவினாலும் இணைப்புப் பட்டியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/144&oldid=1469014" இலிருந்து மீள்விக்கப்பட்டது