பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


293. மாநிலங்கள் கடன்பெறுதல் :

(1) இந்த உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, மாநிலம் ஒன்றன் ஆட்சி அதிகாரமானது, அந்த மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் அவ்வப்போது நிருணயிக்கும் வரம்புகள், எவையேனுமிருப்பின், அவற்றிற்குள்ளடங்கி, அந்த மாநிலத்திரள் நிதியத்தின் பிணையத்தின்பேரில் இந்திய நிலவரைக்குள் கடன்வாங்குவதையும், அவ்வாறு நிருணயிக்கப்பட்ட வரம்புகள் எவையேனுமிருப்பின், அவற்றிற்குள்ளடங்கி, பொறுப்புறுதிகள் அளிப்பதையும் அளாவி நிற்கும்.

(2) இந்திய அரசாங்கம், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ விதிக்கப்படும் வரைக்கட்டுகளுக்குட்பட்டு, மாநிலம் எதற்கும் பெறுகடன்கள் வழங்கலாம் அல்லது 292ஆம் உறுப்பின்படி நிருணயிக்கப்பட்ட வரம்புகள் எவற்றிற்கும் மேற்படாமல், மாநிலம் ஒன்றினால் எழுப்பப்படும் பெறு கடன்கள் பொறுத்து பொறுப்புறுதிகள் அளிக்கலாம்; அத்தகைய பெறுகடன்கள் வழங்குவதற்குத் தேவைப்படும் தொகைகள் இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்படும்.

(3) இந்திய அரசாங்கத்தால் அல்லது அதற்கு முன்பிருந்த அரசாங்கத்தால் மாநிலம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருக்கின்ற அல்லது இந்திய அரசாங்கத்தால் அல்லது அதற்கு முன்பிருந்த அரசாங்கத்தால் பொறுப்புறுதி அளிக்கப்பட்டிருக்கின்ற பெறுகடன் ஒன்றின் பகுதி எதுவும் இன்னும் கொடுபடாமல் இருக்குமாயின், அந்த மாநிலம், இந்திய அரசாங்கத்தின் இசைவில்லாமல், பெறுகடன் எதனையும் எழுப்புதல் ஆகாது.

(4). (3)ஆம் கூறின்படியான இசைவு, இந்திய அரசாங்கம் தக்கதெனக் கருதி விதிக்கும் வரைக்கட்டுகள், எவையேனுமிருப்பின், அவற்றிற்குட்பட்டு அளிக்கப்படலாம்.

அத்தியாயம் III

சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் மற்றும் உரிமைவழக்குகள்

294. குறித்தசில நேர்வுகளில் சொத்து, சொத்திருப்புகள், உரிமைகள், பொறுப்படைவுகள், கடமைப்பாடுகள் ஆகியவற்றிற்கு வாரிசுரிமை :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு, பாகிஸ்தான் தன்னாட்சியத்தை அல்லது மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம், மேற்குப் பஞ்சாப், கிழக்குப் பஞ்சாப் ஆகிய மாகாணங்களை உருவாக்கியதன் காரணமாகச் செய்யப்பட்ட அல்லது செய்யப்படவேண்டிய நேரமைவு எதற்கும் உட்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து

(அ)அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு மாட்சிமை தங்கிய மன்னரிடம் இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்திற்கென உற்றமைந்திருந்த சொத்து, சொத்திருப்புகள் ஆகிய அனைத்தும், அத்துடன் அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு மாட்சிமை தங்கிய மன்னரிடம் ஆளுநர் மாகாணம் ஒவ்வொன்றின் அரசாங்கத்திற்குமென உற்றமைந்திருந்த சொத்து, சொத்திருப்புகள் ஆகிய அனைத்தும், முறையே ஒன்றியத்திடமும் நேரிணையான மாநிலத்திடமும் உற்றமையும்; மேலும்,
(ஆ) இந்தியத் தன்னாட்சிய அரசாங்கம், ஆளுநர் மாகாணம் ஒவ்வொன்றின் அரசாங்கம் ஆகியவற்றின் அனைத்து உரிமைகளும் பொறுப்படைவுகளும் கடமைப்பாடுகளும், அவை ஒப்பந்தம் ஒன்றிலிருந்து எழுவனவாயினும் பிறவாறாயினும், முறையே இந்திய அரசாங்கம், நேரிணையான் மாநிலம் ஒவ்வொன்றின் அரசாங்கம் ஆகியவற்றின் உரிமைகளாகவும் பொறுப்படைவுகளாகவும் கடமைப்பாடுகளாகவும் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/157&oldid=1468692" இலிருந்து மீள்விக்கப்பட்டது