பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176


(7) “நேரிணையான மாகாணம்", "நேரிணையான இந்தியக் குறுநிலம்" அல்லது "நேரிணையான மாநிலம்” என்பது, ஐயப்பாடான நேர்வுகளில் பிரச்சனையிலுள்ள குறிப்பிட்ட நோக்கத்திற்காக நேர்வுக்கேற்ப, நேரிணையான மாகாணம், நேரிணையான இந்தியக் குறுநிலம் அல்லது நேரிணையான மாநிலம் எனக் குடியரசுத்தலைவரால் தீர்மானிக்கப்படும் மாகாணம், இந்தியக் குறுநிலம் அல்லது மாநிலம் என்று பொருள்படும்;


(8) “உறுகடன்" என்பது, ஆண்டுத் தொகைகள் வாயிலாக மூலதனத் தொகைகளைத் திருப்பிச் செலுத்தும் கடமைப்பாடு பொறுத்த பொறுப்படைவு எதனையும், பொறுப்புறுதி எதற்கும் உட்பட்ட பொறுப்படைவு எதனையும் உள்ளடக்கும்; மேலும், "உறுகடன் செலவீடுகள்" என்பதற்கும் அதற்கிணங்கப் பொருள்கொள்ளுதல் வேண்டும்;

(9) “இறங்குசொத்துத் தீர்வை" என்பது, ஒருவரது இறப்பின் பேரில் இறங்குகிற அல்லது நாடாளுமன்றத்தால் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தால் அத்தீர்வை தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களின் வகையங்களின்படி அவ்வாறு இறங்குவதாகக் கொள்ளப்படுகிற சொத்து அனைத்திற்கும் அச்சட்டங்களாலோ அவற்றின் வழியாலோ வகுக்கப்படும் விதிகளுக்கு இணங்கக் கண்டறிந்த மூலதன மதிப்பின்மீது அல்லது அதனை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்பட வேண்டிய தீர்வை என்று பொருள்படும்;

(10) "நிலவுறும் சட்டம்" என்பது, இந்த அரசமைப்பின் தொடக்க நிலைக்கு முன்பு சட்டம், அவசரச்சட்டம், ஆணை, துணைவிதி, விதி அல்லது ஒழுங்குறுத்தும்விதி எதனையும் இயற்றுவதற்கு அதிகாரம் உடையதாக இருந்த சட்டமன்றம், அதிகாரஅமைப்பு எதனாலும் அல்லது நபர் எவராலும் இயற்றப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட சட்டம், அவசரச் சட்டம், ஆணை, துணைவிதி, விதி அல்லது ஒழுங்குறுத்தும்விதி என்று பொருள்படும்;

(11) “கூட்டாட்சிய நீதிமன்றம்" என்பது, 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றம் என்று பொருள்படும்;

(12) "சரக்குகள்" என்பது, பொருள்கள், பண்டங்கள், உருப்பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கும்;

(13) "பொறுப்புறுதி" என்பது, இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு ஒரு பொறுப்பேற்பு நிறுவனத்தின் ஆதாயங்கள், குறித்துரைக்கப்படும் ஒரு தொகைக்குக் குறையுமாயின், அத்தொகையை செலுத்துவதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட கடமைப்பாடு எதனையும் உள்ளடக்கும்;

(14) "உயர் நீதிமன்றம்" என்பது, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை, மாநிலம் எதற்குமான ஒர் உயர் நீதிமன்றமாகக் கொள்ளப்படுகிற நீதிமன்றம் எதுவும் என்று பொருள்படும்; மேலும்,

அது__

(அ) இந்த அரசமைப்பின்படி இந்திய ஆட்சிநிலவரையில் ஓர் உயர் நீதிமன்றமாக அமைக்கப்பட்ட அல்லது மறுஅமைப்பு செய்யப்பட்ட நீதிமன்றம் எதனையும்; மற்றும்

(ஆ) இந்த அரசமைப்பின் நோக்கங்கள் அனைத்திற்காகவும் அல்லது அவற்றுள் எதற்காகவும் ஓர் உயர் நீதிமன்றம் என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பும் இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள பிற நீதிமன்றம் எதனையும் உள்ளடக்கும்;

(15) "இந்தியக் குறுநிலம்" என்பது, இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தால் அத்தகையதொரு குறுநிலமாக ஏற்பளிக்கப்பட்ட ஆட்சிநிலவரை எதுவும் என்று பொருள்படும்;

(16) “பகுதி” என்பது, இந்த அரசமைப்பின் ஒரு பகுதி என்று பொருள்படும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/202&oldid=1469010" இலிருந்து மீள்விக்கப்பட்டது